Published : 27 Oct 2023 05:40 AM
Last Updated : 27 Oct 2023 05:40 AM
சென்னை: ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டுகளை வீசிய வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி `கருக்கா' வினோத் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டார். தாக்குதலுக்கு பின்னணியில் இருப்பவர்களைக் கண்டறியுமாறு ஆளுநர் மாளிகை வலியுறுத்தியுள்ளது.
கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையின் 1-வது நுழைவாயில் முன்பு நேற்று முன்தினம் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இது தொடர்பாக நந்தனம் எஸ்.எம்.நகரைச் சேர்ந்த ரவுடி `கருக்கா' வினோத் (42) கைது செய்யப்பட்டார்.
அவர் மீது பொது கட்டிடத்துக்கு தீ வைத்து சேதப்படுத்த முயற்சிப்பது, அரசு ஊழியரை பணி செய்ய விடாமல்தடுப்பது, கொடூரமான ஆயுதங்களைப் பயன்படுத்தி கொலை மிரட்டல் விடுப்பது, வெடிபொருள் தடுப்பு சட்டப் பிரிவு, பொது சொத்துக்கு சேதம் விளைவிப்பது ஆகிய 5 சட்டப் பிரிவுகளின் கீழ் கிண்டி போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
தொடர்ந்து, இரவோடு இரவாக சைதாப்பேட்டை நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், நேற்று அதிகாலை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த விவகாரம் தொடர்பான முதல்தகவல் அறிக்கையில் (எஃப்ஐஆர்) பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆளுநர் மாளிகை அருகே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தலைமைக் காவலர் மோகன் கருக்கா வினோத்தைப் பிடித்தார். அவர் அளித்த தனி அறிக்கையின்படி எஃப்ஐஆர் பதிவு செய்யயப்பட்டுள்ளது. அதில் மோகன் தெரிவித்த தகவல்கள் வருமாறு:
கடந்த 25-ம் தேதி ரோந்துப் பணிக்காக நியமிக்கப்பட்ட நானும், வாகன ஓட்டுநர் சில்லுவானுவும் ஆளுநர் மாளிகை பிரதான நுழைவாயில் அருகே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தோம். மதியம் 2.40 மணியளவில் ஆளுநர் மாளிகையின் பிரதான நுழை வாயில் எண்.1ல் நாங்கள் பணியில் இருந்தபோது, எதிர்ப்புறம் உள்ள நடைபாதையில் இருந்து ஆளுநர் மாளிகையின் நுழை வாயிலை நோக்கி இரு பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டிலில் தீ வைத்து, ஒருவர் வீசி எறிந்தார். அது நுழை வாயிலின் தடுப்பு அருகே பலத்த சப்தத்துடன் விழுந்து, தீப்பற்றி எரிந்தது.
உடனே நானும், உடனிருந்தவர்களும் அந்த நபரைப் பிடிப்பதற்காக ஓடியபோது, மற்றொரு பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டிலில் தீவைத்து, எங்களை நோக்கி வீசினார். அந்த பாட்டில் பூந்தோட்ட தடுப்புச் சுவர் மீது விழுந்தது.
பின்னர் நானும், காவலர் சில்வானு உள்ளிட்ட காவலர்களும் சேர்ந்து அந்த நபரை மடக்கிப் பிடிக்க முற்பட்டோம். அப்போது, "என்னைப் பிடிக்க வந்தீர்கள் என்றால், உங்கள் மீதும் பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டிலை தூக்கி எறிந்து வெடிக்கச் செய்வேன்" என்று மிரட்டினார். ஆனாலும், நாங்கள் அவரை மடக்கிப் பிடித்து, காவல் நிலையத்தில் ஒப்படைத்தோம். இவ்வாறு மோகன் அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
முன்னதாக, ஆளுநர் மாளிகை தரப்பில் நேற்று முன்தினம் இரவு சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது. அதில், "ஆளுநர் மாளிகை பாதுகாப்பு அதிகாரிகள் உஷாராக இருந்ததால், பெரும் அசம்பாவித சம்பவம் தவிர்க்கப்பட்டது. ஆளுநர் மாளிகையின் பிரதான நுழைவாயில் எண்-1ல் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளன.
பல மாதங்களாக ஆளுநர் மீது அநாகரிகமான வார்த்தைகளைப் பயன்படுத்தியும், அவரது உயிருக்குஅச்சுறுத்தல் விடுக்கும் வகையிலும் தொடர்ந்து வாய்மொழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இவை, ஆளுநரின் அரசியலமைப்பு சட்டப் பணிகளை செய்யவிடாமல், அவரைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இருக்கின்றன. இது தொடர்பாக போலீஸாரிடம் புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
தற்போது ஆளுநரை அச்சுறுத்தும் நோக்கில் நடத்தப்பட்ட பெட்ரோல் குண்டு தாக்குதல்களை தீவிரமாக ஆராய்ந்து, இந்திய தண்டனைச் சட்டம் 124-ன் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ள சதிகாரர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் உரியதண்டனை வழங்க வேண்டும். மேலும்,ஆளுநரின் பாதுகாப்பை உறுதிசெய்யத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT