Published : 27 Oct 2023 04:58 AM
Last Updated : 27 Oct 2023 04:58 AM

மகளிர் உரிமைத்தொகை கோரி 12 லட்சம் பேர் மேல்முறையீடு: அமைச்சர் உதயநிதி தகவல்

விருதுநகர்: மகளிர் உரிமைத்தொகை கோரி 12 லட்சம் பேர் மேல்முறையீடு செய்துள்ளதாகவும், தகுதியானவர்களுக்கு நிச்சயம் உரிமைத்தொகை கிடைக்கும் என்றும் அமைச்சர் உதயநிதி கூறினார்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில், மகளிர் உரிமைத்தொகை கோரி மேல்முறையீடு செய்தவர்களின் விவரங்கள் சரிபார்ப்பு பணியை அமைச்சர் உதயநிதி நேற்று ஆய்வு செய்தார்.

அப்போது, மேல்முறையீடு செய்த இருவரை தொலைபேசியில் அழைத்து விசாரித்தார்.தொடர்ந்து, மேல்முறையீட்டுமனுக்கள் தொடர்பான ஆய்வைவிரைவுபடுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

பின்னர் அமைச்சர் உதயநிதிசெய்தியாளர்களிடம் கூறியதாவது: மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை கடந்த செப். மாதம்தமிழக முதல்வர் தொடங்கி வைத்தார். தகுதியான 1.6 கோடி மகளிரின் வங்கிக் கணக்கில் உரிமைத்தொகை செலுத்தப்பட்டது. தகுதியில்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. 30 நாட்களுக்குள் அவர்கள் மேல்முறையீடு செய்யவும் அவகாசம் அளிக்கப்பட்டது.

மேலும், விடுபட்டவர்கள் மேல்முறையீடு செய்ய இரண்டு கட்டங்களாக வாய்ப்புகள் அளிக்கப்பட்டன. மேல்முறையீடு செய்வதற்கு 2 நாட்கள் சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டு, விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இவை அனைத்தும் அரசிடம் உள்ள தகவல் தரவுகள் மூலம் சரிபார்க்கப்பட்டன. அரசு அலுவலர்கள் மூலம் நேரடி கள ஆய்வும் மேற்கொள்ளப்பட்டது.

கடந்த 24-ம் தேதியுடன் காலக்கெடு முடிவடைந்த நிலையில், 30 நாட்களுக்குள் பரிசீலனை செய்துமுடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாநில அளவில் 11.85 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மேல்முறையீட்டு விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர். தகுதியான பயனாளிகளுக்கு நிச்சயம் உரிமைத்தொகை கிடைக்கும். அதற்கான பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன.

சென்னையில் ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டுவீசப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறை அறிக்கை அளித்துள்ளது. எந்த மாதிரியான வன்முறையாக இருந்தாலும் அது கண்டிக்கத்தக்கது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளும். இவ்வாறு அமைச்சர் உதயநிதி கூறினார்.

ஆய்வின்போது, அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம்தென்னரசு, சிறப்புத் திட்டங்கள் அமலாக்கத் துறை செயலர் தாரேஷ்அகமது, மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x