தீபாவளி நெருங்குவதால் கோவை கடைவீதிகளில் அதிகரிக்கும் கூட்டம் - ‘வாட்ச் டவர்’ அமைத்து போலீஸார் கண்காணிப்பு

தீபாவளி நெருங்குவதால் கோவை கடைவீதிகளில் அதிகரிக்கும் கூட்டம் - ‘வாட்ச் டவர்’ அமைத்து போலீஸார் கண்காணிப்பு
Updated on
1 min read

கோவை: தீபாவளி பண்டிகை நெருங்குவதைத் தொடர்ந்து, கோவை கடை வீதிகளில் ‘வாட்ச் டவர்’அமைத்து காவல்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.

தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 12-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, கோவை மாநகர கடை வீதிகளில் பண்டிகை கால விற்பனை இப்போதே களைகட்டத் தொடங்கி விட்டது. குறிப்பாக, காந்திபுரம் நூறடி சாலை, கிராஸ்கட் சாலை, ஒப்பணக்கார வீதி, பெரியகடை வீதி, ராஜ வீதி உள்ளிட்ட இடங்களில் புத்தாடைகள், ஆபரணங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது.

மக்கள் கூட்டத்தை பயன்படுத்தி திருட்டு, வழிப் பறி போன்ற சம்பவங்களில் ஈடுபடுவதை தடுக்க, காவல் துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். கிராஸ்கட் சாலை, ஒப்பணக்கார வீதி உள்ளிட்ட இடங்களில் 15 அடி உயரத்துக்கு ‘வாட்ச் டவர்’ (கண்காணிப்பு கோபுரம்) அமைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாநகர காவல்துறையினர் கூறும்போது,‘‘ வர்த்தக பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தடுக்கவும்,பொது மக்கள் பாதுகாப்பாக வந்துசெல்வதை கண்காணிக்கவும், குற்றச் சம்பவங்கள் நடக்காமல் தடுக்கவும் தற்போதிலிருந்தே கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பிக்பாக்கெட், ஜேப்படி திருடர்களை பிடிக்க, சாதாரண உடைகளில் குற்றப்பிரிவு காவல் துறையினர் கண்காணித்து வருகின்றனர். மேலும் மேற்கண்ட வர்த்தக மையங்கள் உள்ள சாலைகளை, அங்கு பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் மூலம், புறக்காவல் நிலையங்களில் உள்ள மெகா திரை மூலமும் காவலர்கள் கண்காணித்து வருகின்றனர்.

நெரிசல் ஏற்படும் இடங்களில் காவலர்கள் பணியில் அமர்த்தப்பட்டு போக்குவரத்து ஒழுங்குபடுத்தப்பட்டு வருகிறது. ‘வாட்ச் டவர்’ அமைக்கப் பட்டுள்ளது. பண்டிகை நெருங்கும் சமயத்தில் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள காவலர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்’’ என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in