

சென்னை: டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் ரூ.100 கோடியில் கலைஞர் நூற்றாண்டு ஆராய்ச்சி கட்டிடம் விரைவில் அமைக்கப்பட உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
பல்வேறு வகையான நோய்களில் இருந்து மக்களை காப்பது, நோய்கள் வராமல் தடுப்பது போன்ற ஆராய்ச்சி பணிகளை மேற்கொள்ளும் வகையில், தமிழ்நாடு மருத்துவக் கல்வி, ஆராய்ச்சி இயக்ககத்தின் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. சென்னை கீழ்ப்பாக்கத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், அதன் புதிய இலச்சினையை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார்.
அத்துடன், பன்னாட்டு மருத்துவ ஆய்விதழ், நுண்ணுயிர் எதிர்ப்பு சிகிச்சை வழிகாட்டு நெறிமுறை கையேட்டின் முதல் பிரதி, மருத்துவ மேற்படிப்பு மாணவர்களுக்கான மாவட்ட உள்ளுறை பயிற்சி திட்ட மருத்துவமனைகள் பட்டியல் ஆகியவற்றையும் வெளியிட்டார். அப்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் ரூ.100 கோடியில் கலைஞர் நூற்றாண்டு மருத்துவ ஆராய்ச்சி கட்டிடம் விரைவில் கட்டப்பட உள்ளது. இதற்காக இடம் தேர்வு செய்யப்பட்டு, வடிவமைப்பு பணிகள் முடிந்துள்ளன. விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.
மத்திய அரசு ஒதுக்கீட்டில் 6 இளங்கலை மருத்துவ இடங்கள் கடந்த ஆண்டு நிரப்பப்படாமல் காலியாகவே இருந்தன. அதுபோன்ற காலி இடங்களை கலந்தாய்வு மூலம் நிரப்ப வேண்டும். இல்லாவிட்டால், மாநில அரசின் ஒதுக்கீட்டுக்காவது தரவேண்டும் என்று மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பினோம். அதற்கு இதுவரை பதில் இல்லை. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது குறித்து ஆராய்ந்து வருகிறோம். விரைவில் நல்ல தீர்வு கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.