Published : 27 Oct 2023 06:15 AM
Last Updated : 27 Oct 2023 06:15 AM
சென்னை: நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் நிலையில், நாம்தற்போது மொழி, மதம் அடிப்படையில் பிரிவினைப்பட்டு நிற்கிறோம் என்று ஆளுநர் ஆர்.என்,ரவி வேதனையுடன் தெரிவித்தார்.
டெல்லியில் புதிய நாடாளுமன்றம் அருகில் சுதந்திரப் போராட்டவீரர்களை நினைவு கூரும் விதமாக ‘அமிர்த வாடிகா நினைவுப் பூங்கா’அமைக்கப்பட உள்ளது. இதற்காகநாடு முழுவதிலும் இருந்து ‘என்மண் என் தேசம்’ என்ற பெயரில், கலசத்தில் மண் எடுத்து வரப்பட்டு,டெல்லிக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதற்கு அமிர்த கலச யாத்திரை என பெயரிடப்பட்டுள்ளது.
அந்தவகையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து எடுத்து வரப்படும் மண், மண்டல வாரியாக கலசத்தில் இடப்பட்டு, அஞ்சல்துறை வாயிலாக சிறப்புரயில் மூலம் டெல்லி கொண்டுசெல்லப்படுகிறது. இப்பணியில்,தமிழகத்தில் உள்ள நேரு யுவகேந்திரா தன்னார்வலர்கள், மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் மற்றும் அஞ்சல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், தமிழகத்தில் இருந்து மண் கொண்டு செல்வதற்கான அமிர்த கலச யாத்திரையை ஆளுநர் ஆர்.என்.ரவி, சென்னை கிண்டி ராஜ்பவனில் நேற்று தொடங்கி வைத்தார். அப்போது ஆளுநர் பேசியதாவது:
நாட்டின் 75 வது சுதந்திர ஆண்டில், சுதந்திரப் போராட்டத்தின்போது தங்கள் இன்னுயிர் ஈந்தவர்களை போற்றும் வகையில் இந்த நிகழ்வு அமைந்துள்ளது. கடந்த 1857-ல் சுதந்திரப் போராட்டம் தொடங்கியது என்று எல்லோரும் கூறுகின்றனர். ஆனால், 1801-ம் ஆண்டே தமிழகத்தில் சுதந்திரப் போராட்டம் தொடங்கிவிட்டது.
சிவகங்கையின் மருது சகோதரர்கள் பல்வேறு குறுநில மன்னர்களுடன் இணைந்து சுதந்திரத்துக்கான பிரகடனத்தை, நாடு முழுமையும் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம் இருந்து விடுதலை பெறுவதற்கான பிரகடனத்தை வெளியிட்டனர். அவர்களை எவ்வளவு பேர் தற்போது நினைவு கூர்கிறோம். அவர்களுடன் 543 பேரை தூக்கிலிட்டு, அவர்களின் தலையை தொங்கவிட்டு, அதன்மூலம் மக்களை ஆங்கிலேயர்கள் பயமுறுத்தினர்.
நாட்டுக்காக உயிர்த் தியாகம்செய்த பல்லாயிரக்கணக்கானவர்களை நாம் மறந்துவிட்டோம். அவர்களை நினைவுகூர்வது என்பது மிகவும் முக்கியம். கடந்த1905-ம் ஆண்டில் வங்கப் பிரிவினையை பிரிட்டிஷ் அரசு அறிவித்தபோது, தமிழகம் உட்பட நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது. அப்போது ஒன்றுபட்டு இருந்தோம். ஆனால், இன்று சுதந்திரம் பெற்று 75-வது ஆண்டை கொண்டாடும் நிலையில், மொழி, மதம் அடிப்படையில் வேறுபட்டு நிற்கிறோம். இதற்காகவா சுதந்திரப் போராட்டத்தில் பலர் தங்கள் இன்னுயிரை இழந்தனர்?
எனவே, நாம் தியாகிகளை கட்டாயம் நினைவுகூர வேண்டும்.சென்னை அருகில் உள்ள உத்திரமேரூரிலும், விழுப்புரத்திலும் உள்ள கல்வெட்டுகளில் ஜனநாயகம் குறித்து தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 1,200 ஆண்டுகளுக்கு முன்பு ஜனநாயகம் குறித்து பொறிக்கப்பட்டவற்றை நாம் படிக்க வேண்டும். சுதந்திரத்துக்காக பாடுபட்டவர்களை மதிப்பதுடன், நமது பிள்ளைகளுக்கும் அவர்களின் அருமை, பெருமைகளை சொல்லிக் கொடுக்க வேண்டும். இவ்வாறு ஆளுநர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், அஞ்சல்துறை தலைவர்கள் ஸ்ரீதேவி, நடராஜன். சிஐஎஸ்எப் கமான்டன்ட், நேரு யுவகேந்திரா தமிழக பிரிவு நிர்வாகிஉள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT