Published : 27 Oct 2023 06:05 AM
Last Updated : 27 Oct 2023 06:05 AM
சென்னை: ஆளுநர் மாளிகை அருகே பெட்ரோல்குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக காவல்துறை ஆணையரிடம் அளிக்கப்பட்டிருக்கும் புகாரில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் மீதான ஆதாரமற்ற குற்றச்சாட்டை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலசெயலாளர் இரா.முத்தரசன்: ஆளுநர்மாளிகை நுழைவாயில் அருகே, பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆளுநர் மாளிகை அதிகாரி, சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். அந்தபுகாரில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் மீது அடிப்படையற்ற குற்றச்சாட்டை திணித்துள்ளார்.
அதில் திமுக மற்றும் அதன் கூட்டணிகட்சிகளின் தலைவர்கள் மற்றும் தொண்டர்களால் அச்சுறுத்தப்படுவதாக புனையப்பட்டுள்ளது. இதனைஏற்க முடியாது. ஆர்.என்.ரவி ஆளுநர்பொறுப்பை ஏற்றுக் கொண்ட நாளில்இருந்து அதிகார அத்துமீறலில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். இதனால் கடுமையான விமர்சனங்களுக்கு ஆளாகியும் வருகிறார். அவரது அதிகார அத்துமீறலை விமர்சனம் செய்யும் உரிமையை பறிக்கும் வஞ்சகஎண்ணத்துடன் தற்போது மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை வன்மையாக மறுக்கிறோம்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம்கடும் கண்டனத்துக்குரியது. இதற்கு காரணமான குற்றவாளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் இச்சம்பவம் குறித்து ஆளுநர் மாளிகை அதிகாரி சென்னை காவல் ஆணையரிடம் அளித்த புகாரில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் மீது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார்.
இது முழுக்க, முழுக்க புனையப்பட்டுள்ள கட்டுக்கதை. ஆளுநர் ஆர்.என். ரவி தொடக்கத்தில் இருந்தே மாநிலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை ஜனநாயக ரீதியில் செயல்பட விடாமல்தடுத்து வருவதால் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறார். இந்த புகாரின் மூலம் அரசியல் ஆதாயம் தேடவும், கருத்துரிமையை பறிக்கவும் மட்டுமே முயற்சிக்கிறார். இந்த புகார் அடிப்படை ஆதாரமற்றது. உடனடியாகபுகாரை திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT