

மதுரை: மதுரை யாதவர் கல்லூரிக்குத் தேர்வான புதிய நிர்வாகிகளுக்கு அரசின் அங்கீகாரம் கி்டைக்காததால் செயல்பட முடியாத அளவுக்குச் சட்ட சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் இதற்கு சுமூகமான முறையில் தீர்வு காண வேண்டும் என யாதவர் சமூகத்தின் நிர்வாகிகள் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை யாதவர் கல்லூரியில் பல ஆண்டுகளுக்குப் பின் கடந்த ஆக.5-ம் தேதி நிர்வாகிகள் தேர்தல் நடந்தது. யாதவர் கல்வி நிதி செயற் குழு உறுப்பினர்கள் 11 பேரை தேர்ந்தெடுக்க நடந்த தேர்தலில் 52 பேர் போட்டியிட்டனர். கடந்த செப்.4-ம் தேதி வாக்குகளை எண்ணுவதற்கான அனுமதியை மதுரை உயர் நீதிமன்றம் வழங்கியது. சர்ச்சைக் குரிய 932 வாக்குகளை எண்ண வேண்டாம் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த செப்.9-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் கேபிஎஸ் அணி சார்பில் போட்டியிட்ட ஆர்விஎன்.கண்ணன் உட்பட 8 பேரும், பாண்டவர் அணியில் போட்டியிட்ட எஸ்.மலேசியா பாண்டி உள்ளிட்ட 3 பேரும் வெற்றி பெற்றனர். இதற்கான சான்றிதழை தேர்தலை நடத்திய ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் வழங்கினார். வெற்றி பெற்ற செயற் குழு உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது.
இதில் 8 பேர் பங்கேற்று கல்லூரியை நிர்வகிக்க நிர்வாகிகளைத் தேர்ந்தெடுத்தனர். கல்லூரிச் செயலாளர் மற்றும் தாளாளராக ஆர்விஎன். கண்ணன், தலைவராக எஸ்.ஜெயராமன், பொருளாளராக சி.கிருஷ்ண வேல் துணைத் தலைவராக எஸ்.பி.சிவராம கிருஷ்ணன், துணைச் செயலாளராக எஸ்.முத்து கிருஷ்ணன் என்ற கிட்டுவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
உடனே புதிய நிர்வாகிகள் கல்லூரி நிர்வாகப் பொறுப்பை ஓய்வுபெற்ற நீதிபதி ராஜேஸ்வரனிடமிருந்து ஏற்றனர். அகில இந்திய யாதவர் மகா சபை செயலாளர் நா.கண்ணன், யாதவர் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கச் செயலாளர் குணசேகரன், வேட்பாளர்களாக போட்டியிட்ட டிஆர்.நாகராஜன், கருணாநிதி, கந்தவேல்.
புதிய நிர்வாகிகள் யாதவர் கல்வி நிதி உறுப்பினர்கள் பொதுக்குழு ஒப்புதல் பெற்று சட்டப்படி தேர்வாகாததால், தேர்வாகி 49 நாட்களாகியும் மாவட்டப் பதிவாளர், கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் என அரசின் ஒப்புதல் கிடைக்கவில்லை என்றும் இதனால் ஊதியம் வழங்குவது உள்ளிட்ட பணிகள் எதையும் மேற்கொள்ள முடியாமல் நிர்வாகிகள் தவிக்கும் சூழல் இருப்பதால் கல்லூரி செயல்பாடு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் யாதவர் சமூக நிர்வாகிகள் கூறினர்.
இது குறித்து அகில இந்திய யாதவர் மகாசபை செயலாளர் நா.கண்ணன், யாதவா் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கச் செயலாளர் குணசேகரன், வேட்பாளர்களாக போட்டியிட்ட டிஆர்.நாகராஜன், கருணாநிதி, கந்தவேல் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியது: யாதவர் கல்வி நிதி உறுப்பினர்களாக 52 பேர் உள்ளனர்.
இந்த அமைப்பின் பொதுக் குழு ஒப்புதல் அளித்த பின்னரே நிர்வாகக் குழு தேர்தல் நடத்தப்பட வேண்டும். இது குறித்து பல முறை மனுக்கள் அளித்தும் யாரும் கண்டுகொள்ளவில்லை. அவசர அவசரமாக தேர்தலை நடத்திவிட்டனர். இதனால் கல்வி நிதி உறுப்பினர்கள் தேர்தலில் பங்கேற்வில்லை.
புதிதாக தேர்வான நிர்வாகிகள் பட்டியலை யாதவர் கல்வி நிதி பொதுக்குழு ஒப்புதலுடன் சமர்ப்பித்தால் மட்டுமே மாவட்ட பதிவாளரால் அங்கீகரிக்க முடியும். அவரது அங்கீகாரப் படிவத்துடன் கல்லூரிக் கல்வி இணை இயக்குநருக்கு விண்ணப்பித்தால் மட்டுமே அவரால் ஏற்க முடியும்.
முறையான தேர்தல் நடக்காததால் நிர்வாகிகள் பொறுப் பேற்று 48 நாட்களாகியும் அரசின் ஒப்புதல் கிடைக்காததால் செயல்பட முடியவில்லை. ஊதியம் வழங்குவது உள்ளிட்ட முக்கியப் பணிகள் எதையும் நிர்வாகிகளால் மேற்கொள்ள முடியாத சூழல் உள்ளது. இந்தச் சிக்கலுக்கு தீர்வு காண யாதவர் கல்வி நிதி உறுப்பினர்களின் பொதுக் குழு கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும்.
கல்லூரி உறுப் பினர்களில் தகுதியானோரை கல்வி நிதி உறுப்பினராகச் சேர்க்கலாம். பின்னர் அனைவரின் ஒப்புதலுடன் தேர்தல் மூலமோ ஏகமனதாகவோ நிர்வாகிகளைத் தேர்வு செய்யலாம். இதன் பின்னர் எந்த சிக்கலும் இல்லாமல் கல்லூரியை நிர்வகிக்கலாம். இதைச் செய்யாமல் பொதுக் குழுவை அதிகார மில்லாதவர்கள் கூட்டுவதும்,
தவறான வழியில் அனுமதியையும் பெற்றால் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வோம். தமிழக முதல்வரின் கவனத்துக்கும் கொண்டு சென்றுள்ளோம். இவ்வாறு நிர்வாகிகள் கூறினர். இதற்கிடையே புதிய நிர்வாகிகள் சார்பில் பொதுக் குழுவை கூட்டி அரசின் ஒப்புதலை பெற திட்டமிட்டுள்ளனர்.