

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் ரூ.78 கோடியில் ரயில்வே மேம்பாலம் கட்ட டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதால், இப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தைக் கடந்து தினமும் 14 எக்ஸ்பிரஸ் மற்றும் பயணிகள் ரயில்கள் மற்றும் 4 வாராந்திர ரயில்கள், 5 சரக்கு ரயில்கள் செல்கின்றன. இதனால், ரயில் செல்லும் போது நீடாமங்கலம் ரயில் நிலையத்தையொட்டி உள்ள ரயில்வே கேட் (கேட் எண்: 20) நாள் ஒன்றுக்கு குறைந்தது 8 மணி நேரத்துக்கும் மேலாக மூடப்படுகிறது.
இதனால், இந்த ரயில்வே கேட் வழியாக நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, காரைக்கால் ஆகிய பகுதிகளுக்கும், திருத்துறைப் பூண்டி, பட்டுக்கோட்டை, முத்துப்பேட்டை, மன்னார்குடி பகுதிகளிலிருந்து கும்பகோணம் மற்றும் அதன் வழியாக சென்னைக்கும் செல்லும் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது.
மேலும், இங்கு சரக்கு ரயிலில் உர மூட்டைகள் வரும் போதும், இங்கிருந்து பிற இடங்களுக்கு நெல் மூட்டைகள் ஏற்றும் போதும், சரக்கு ரயிலின் வேகன்கள் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் நிறுத்தப்பட்டு, பணிகள் முடிந்த பிறகு வேகன்கள் இணைக்கப் பட்டு ரயில் புறப்படும். அதுவரை ரயில்வே கேட் மூடப்பட்டிருக்கும்.
இதனால், நீடாமங்கலம் பகுதி மக்கள் மட்டுமின்றி, இந்த ஊரை கடந்து செல்லும் அனைத்து வாகன ஓட்டிகளும் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே, இங்கு ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில், இப்பிரச்சினைக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில், மாநில நெடுஞ்சாலைத் துறை சார்பில் மேம்பாலம் கட்டரூ.170 கோடியில் திட்டம் அறிவித்து, பழைய நீடாமங்கலம் பரப்பனாமேடு, சித்தமல்லி ஆகிய கிராமங்களில் 2.60 ஏக்கர் நிலங்களைக் கையகப்படுத்தி, நிலம்வழங்கியவர்களுக்கு இழப்பீடாகரூ.36 கோடியும் வழங்கப்பட்டுவிட்டது.
இதன் தொடர்ச்சியாக ரூ.78 கோடியில் மேம்பாலம் கட்ட டெண்டர் அறிவிப்பு கடந்த வாரம் வெளியாகியுள்ளது. மேம்பாலம் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்தவுடன் மின் இணைப்பு, குடிநீர் குழாய்கள் அமைத்தல் போன்ற இதர பணிகள் ரூ.30 கோடியில் மேற்கொள்ளப்படவுள்ளதாக நெடுஞ்சாலைத் துறை தஞ்சாவூர் கோட்ட அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து நீடாமங்கலம் வர்த்தக சங்கத் தலைவர் ராஜாராமன்கூறியது: இங்கு மேம்பாலம் கட்ட ரயில்வே துறை சார்பில் 2013-14-ம் நிதியாண்டில் ரூ.53.92 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், அப்போதைய தமிழக அரசு தனது பங்குத் தொகையை ஒதுக்கவில்லை. இது தொடர்பாக கடந்த அதிமுக ஆட்சியில் எம்எல்ஏவாக இருந்த டிஆர்பி.ராஜா பல முறை சட்டப்பேரவையில் பேசினார்.
இந்நிலையில், திமுக அரசு பொறுப்பேற்று, டிஆர்பி.ராஜா அமைச்சராகி உள்ள நிலையில், மேம்பாலம் கட்டுவதற்குத் தேவையான நிலங்களைக் கையகப்படுத்தி, தற்போது டெண்டர் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பு நீடாமங்கலம் பகுதி வர்த்தகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றார்.
இங்கு மேம்பாலம் கட்ட தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்தி வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் நகரச் செயலாளர் சந்துரு கூறியது: 9.8.2012 அன்று சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழுவிடம் இது தொடர்பாக கோரிக்கை மனு அளித்ததன் அடிப்படையில் 24.9.2014 சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். 26.11.2014 அன்று பாலத்தை உடனடியாக கட்ட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
ஆனால், அதன் பிறகும் எந்த முன்னேற்றமும் இல்லை. இதையடுத்து, 2016-ல் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தேன். அதன் பிறகு 13.08.2019 அன்று ரிட் மனு தாக்கல் செய்தேன். மத்திய, மாநில அரசுகள் தங்கள் பங்குத் தொகையை ஒரே நேரத்தில் ஒதுக்கீடு செய்யாததாலேயே மேம்பாலம் கட்டுவதில் தொய்வு இருப்பது தெரியவந்தது.
இதனிடையே, திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மாநில அரசே முழு பொறுப்பையும் ஏற்று பாலத்தை கட்டித் தர முன் வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த மேம்பாலம் கட்டப்படுவதன் மூலம் இப்பகுதி மக்கள் மட்டுமின்றி, நீடாமங்கலத்தை கடந்து செல்பவர்களுக்கும் பேருதவியாக இருக்கும் என்றார்.