Published : 27 Oct 2023 04:14 AM
Last Updated : 27 Oct 2023 04:14 AM
நாகர்கோவில்: திருவிதாங்கூர் மன்னர் காலத்தில், கோயில் திருவிழாக் காலங்களில் வாகனங்களில் சுவாமி எழுந்தருளி கோயிலில் இருந்து புறப்படும் போது, மன்னரும், படை வீரர்களும் அணி வகுத்து நின்று, சுவாமிக்கு மரியாதை செலுத்துவது வழக்கமாக இருந்தது.
இந்தப் பாரம்பரியத்தின் படியே இப்போதும், கேரள மாநிலத்திலும், கன்னியாகுமரி மாவட்டத்திலும் சுவாமி புறப்பாட்டின் போது போலீஸார் அணி வகுப்பு மரியாதை அளிப்பது வழக்கமாக உள்ளது. குறிப்பாக பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து நவராத்திரி விழாவுக்காக சுவாமி விக்ரகங்கள் திருவனந்தபுரத்துக்கு பவனியாக எடுத்துச் செல்லப்படும் போது, இரு மாநில போலீஸாரும் இணைந்து அணி வகுப்பு மரியாதை அளிக்கிறார்கள்.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில், சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் போன்ற முக்கிய கோயில்களில் திருவிழா நாட்களில் இதே நடைமுறை தொடர்கிறது. குமரி மாவட்டம் கேரளாவில் இருந்து தமிழகத்துடன் இணைந்தாலும், மன்னரின் உத்தரவுப்படி குமரி மாவட்ட கோயில்களின் பூஜை முறைகள் மற்றும் ஆகம விதிகள் எந்த சூழ்நிலையிலும் மாறக்கூடாது என்பதற்காக, குமரி மாவட்ட அறநிலையத் துறைக்கு, ஆண்டுதோறும் கேரள அரசு சார்பில் அதற்கான கட்டணம் வழங்கப்படுகிறது.
ஆனால் சமீப காலமாக அரசியல்வாதிகள் தொல்லை இதிலும் புகுந்து கொண்டது. காவல் துறையினர் அணிவகுப்பு மரியாதை அளிக்கும்போது, சுவாமி வாகனங்களுக்கு முன்னதாக சுவாமியை மறைத்துக் கொண்டு அரசியல் பிரமுகர்களும், விஐபிக்களும் நின்று கொள்கின்றனர். இதனால், காவல் துறையினர் செலுத்தும் மரியாதை சுவாமிக்கா? அல்லது அரசியல்வாதிகளுக்கா? என்ற குழப்பம் ஏற்படுகிறது. இது பக்தர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து, ‘இந்து தமிழ்’ நாளிதழின் உங்கள் குரல் பகுதியில், இறச்ச குளத்தை சேர்ந்த பக்தர் காளியப்பன் கூறியதாவது: சுவாமி வாகனங்களுக்கு பாரம்பரிய முறைப்படி காவல்துறையினர் அணிவகுப்பு மரியாதை அளிக்கும்போது, சுவாமி வாகனங்களை மறைத்தபடி அரசியல் வாதிகள் நின்று கொண்டு தங்களை முன்னிறுத்தி வருகின்றனர். இது ஏற்புடையதல்ல.
அவர்கள் புகைப்படம் எடுத்து தங்களை விளம்பரப் படுத்திக் கொள்ள பல நிகழ்சிகள் இருக்கின்றன. கோயிலில்தான் தங்களை மிகைப்படுத்தி காட்ட வேண்டும் என்பதில்லை. கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் கடந்த 24-ம் தேதி பரிவேட்டைக்காக குதிரை வாகனத்தில் அம்மன் புறப்பாடு நடைபெற்ற போது,
அமைச்சர் மனோ தங்கராஜ், மேயர் மகேஷ் உள்ளிட்ட அரசியல் வாதிகளும், விஐபிக்களும் பரிவேட்டை வாகனத்தை பின்னுக்குத் தள்ளி முன்னே வரிசைகட்டி நின்று கொண்டனர். இவர்களுக்குப் பின்னால் அம்மன் வாகனம் பல அடி தூரம் தள்ளி நின்று கொண்டிருந்தது. அம்மனுக்கு, போலீஸார் அளித்த ராயல் சல்யூட்டையும், துப்பாக்கி ஏந்திய மரியாதையையும் அரசியல் வாதிகள் பெற்றுக் கொண்டனர்.
இது மன்னர்கால பாரம்பரியத்தை கேலிக் கூத்தாக்கும் செயலாக அமைந்திருந்தது. அடுத்து வரும் விழா நாட்களில் இந்நிலை மாற வேண்டும். முற்காலத்தில் படைவீரர்களுக்கு தலைமை ஏற்று மன்னரும் வாள் ஏந்தி சுவாமிக்கு மரியாதை செலுத்தியது போல், இன்றைய அரசியல் வாதிகள் மரியாதை செய்யாவிட்டாலும், போலீஸார் அளிக்கும் மரியாதையையாவது சுவாமிக்கு கிடைக்க வழிவிடுவார்களா? இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT