

மவுலிவாக்கம் கட்டிட விபத்து தொடர்பான வழக்கில் கட்டிட வரைபட அமைப்பாளர் மற்றும் பொறியாளரிடம் 5 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க ஸ்ரீபெரும் புதூர் நீதிமன்றம் அனுமதித்தது.
சென்னை போரூர் அருகே மவுலிவாக்கத்தில் கடந்த ஜூன் 28-ம் தேதி (சனிக்கிழமை) மாலை இடிந்து விழுந்த 11 மாடி கட்டிட விபத்தில் 61 பேர் இறந்தனர்.
இதுதொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட கட்டிட உரிமையாளர் மனோகரன், பொறியாளர்கள் துளசிலிங்கம், சங்கர் ஆகியோரை 4 நாட்கள் காவலில் எடுத்து போலீஸார் விசாரித்து வந்தனர்.
காவல் முடிந்த நிலையில் அவர்களை ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை போலீஸார் ஆஜர்படுத்தினர். அவர்களை சிறையில் அடைக்க மாவட்ட குற்றவியில் நீதிபதி சந்தோஷ் உத்தரவிட்டார். இதை தொடர்ந்து அவர்கள் அனைவரும் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதனிடையே விபத்து தொடர்பாக கட்டிட வரைபட அமைப்பாளர் விஜய்மல்கோத்ரா மற்றும் பொறியாளர் வெங்கட சுப்ரமணியன் ஆகியோரை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதிக் கோரி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிபதி இருவரையும் 5 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.