Last Updated : 26 Oct, 2023 04:40 PM

 

Published : 26 Oct 2023 04:40 PM
Last Updated : 26 Oct 2023 04:40 PM

“2024-ல் அடிமைகளின் முதலாளிகளை விரட்டியடிக்கும் நேரம் வந்துவிட்டது” - அமைச்சர் உதயநிதி பேச்சு

விருதுநகர்: “கடந்த 2021-ல் அடிமைகளை விரட்டி அடித்தது போல், 2024-ல் அடிமைகளின் முதலாளிகளையும் விரட்டியடிக்கும் நேரம் வந்துவிட்டது” என்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

விருதுநகரில் வடக்கு, தெற்கு மாவட்ட திமுக சார்பில் இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், வருவாய்த் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேசுகையில், “திமுகவை அடுத்த 50 ஆண்டுகளுக்கு வழிநடத்த இளம் தலைவர் கிடைத்துள்ளார். கட்சி முன்னோடிகளை நினைவுகூர்ந்து அவர்கள் தியாகத்தை கவுரவிக்கும் வகையில் இளைஞரணி சார்பில் பொற்கிழி வழங்கப்படுவது மகிழ்ச்சிக்குரியது. திமுக உங்களை கைவிடாது என்பதற்கு உதாரணமாக இவ்விழா நடத்தப்படுகிறது. உங்களால் நாங்கள் வளர்ந்திருக்கிறோம், உங்களை வணங்குகிறோம்” என்றார்.

நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், “இளைஞரணி சார்பில் ரூ.40 கோடி வழங்கப்பட்டு மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழக்கப்பட்டு வருகிறது. கட்சியைக் காப்பாற்றியதற்காக மட்டுமல்ல ரத்தம் சிந்திய உங்களை பெருமைப்படுத்த வேண்டும் என்பதற்காக பொற்கிழி வழங்கப்படுகிறது. அமைச்சர் உதயநிதி திமுகவின் சேயான அணியிலிருந்து தாயாகவும் கவனித்து வருகிறார்” என்றார்.

அதைத் தொடர்ந்து, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், "இளைஞரணி 2-வது மாநில மாநாடு சேலத்தில் டிசம்பர் 17-ம் தேதி நடைபெறுகிறது. விருதுநகர் மாவட்டம் வரலாற்று சிறப்பு மிக்க மாவட்டம். பல விடுதலைப் போராட்ட வீரர்களையும், விளையாட்டு வீரர்களையும், எழுத்தாளர்களையும் உருவாக்கிய மாவட்டம். இங்கு வருவதை பெருமையாகக் கருதுகிறேன். அமைச்சரான பின் முதல் முறையாக இங்கு வந்து உங்கள் வாழ்த்துக்களையும் ஆசீர்வாதங்களையும் பெறுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த மாவட்டத்தில் மருது சகோதரர்களைப் போலவும் இரட்டைக் குழல் துப்பாக்கி போலவும் அமைச்சர்கள் இருவரும் பணியாற்றி வருகின்றனர். கட்சியில் 22 அணிகள் இருந்தாலும் அதில் முதன்மையானது இளைஞரணி. உழைத்தால் யாரும் முன்னேறலாம் என்பதற்கு உதராணமாகத் திகழ்கிறது.

நீட் விலக்கு எங்கள் இலக்கு. இது தனிப்பட்ட திமுக பிரச்சினை இல்லை. மக்களின், மாணவர்களின், தமிழகத்தின் பிரச்சினை. நீட் தேர்வுக்காக 22 குழந்தைகளை இழந்துள்ளோம். ஜெயலலிதா இருந்தவரை நீட் தேர்வு வரவில்லை. 2 மாதம் முன் மதுரையில் மாநாடு நடத்தப்பட்டது. யார் நடத்தினார்கள், எதற்காக நடத்தினார்கள் என்பது தெரியவில்லை. ஒரு மாநாடு எப்படி நடத்தக் கூடாது என்பதற்கு உதாரணமாக நடந்துள்ளது. நீட் தேர்வை ரத்து செய்வோம் என தேர்தல் வாக்குறுதியில் கூறினோம். அதற்காக உண்மையாக உழைத்துக் கொண்டிருக்கிறோம். பல தரப்பு மக்களையும், பல்வேறு இயக்கங்களைச் சார்ந்தவர்களையும் நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தில் பங்கெடுக்கச் செய்ய வேண்டும்.

50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்து என்பதை ஒரு கோடி கையெழுத்தாக உயர்த்தி, இளைஞரணி மாநாட்டின் போது முதல்வரிடம் ஒப்படைப் போம். அதை குடியரசுத் தலைவரிடம் அவர் ஒப்படைப்பார். பாஜக ஆட்சிக்கு வந்து 9 ஆண்டுகளுக்கும் மேலாகியும் இதுவரை ஒன்றும் செய்யவில்லை. கார்ப்பரேட்களுக்கான அரசாகத் தான் செயல்படுகிறது. ஒவ்வொருவரது வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்தப்படும் என்றார் மோடி. இதுவரை செலுத்தவில்லை. ஆனால், தமிழக அரசு உரிமைத் தொகை வழங்குவதை தொடங்கிவிட்டது. பாஜக அரசு உயிரிழந்த 56 ஆயிரம் பேருக்கு ஆயுஷ் பாரத் திட்டத்தில் காப்பீடு செய்து பணம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2021-ல் அடிமைகளை விரட்டி அடித்தது போல், 2024-ல் அடிமைகளின் முதலாளிகளையும் விரட்டியடிக்கும் நேரம் வந்துவிட்டது" என்று உதயநிதி பேசினார்.

ராம மூர்த்தி சாலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தென்காசி நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் தனுஷ் எம்.குமார் வரவேற்றார். வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச் சந்திரன், நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் தலைமை வகித்தனர். இக்கூட்டத்தில், திமுக இளைஞரணிச் செயலாளரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வெள்ளி செங்கோல் வழங்கப்பட்டது. அதோடு, இளைஞரணி மாநில மாநாட்டு நிதியாக தெற்கு, வடக்கு மாவட்ட திமுக சார்பில் ரூ.1 கோடியும், இளைஞரணி சார்பில் தலா ரூ.10 லட்சமும் நிதி அளிக்கப்பட்டது. மேலும், இளைஞரணி லோகோ சிலையும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, கல்லூரி சாலையில் அமைக்கப்பட்ட அரங்கில் திமுக முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில், விருதுநகர் தெற்கு, வடக்கு மாவட்ட திமுக முன்னோடிகள் 2 ஆயிரம் பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் பொற்கிழியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ.க்கள் சீனிவாசன் (விருதுநகர்), தங்கப் பாண்டியன் (ராஜபாளையம்), விருதுநகர் நகாட்சித் தலைவர் மாதவன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x