“தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஊர்வலங்களை நடத்தியே தீருவோம்” - ஆர்எஸ்எஸ் திட்டவட்டம்

ஆர்எஸ்எஸ் ஊர்வலம் | கோப்புப் படம்
ஆர்எஸ்எஸ் ஊர்வலம் | கோப்புப் படம்
Updated on
2 min read

சென்னை: தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அணிவகுப்பு ஊர்வலங்களை நடத்தியே தீருவோம் என்று ஆர்எஸ்எஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பின் வட தமிழக தலைவர் குமாரசாமி விடுத்துள்ள அறிக்கையில், “இந்தியாவை உன்னத நிலைக்கு உயர்த்த வேண்டும் என்ற லட்சியத்தோடு கடந்த 98 ஆண்டுகளாக பாடுபட்டு வருகிறது ஆர்எஸ்எஸ். தேசபக்தி மிகுந்த, சுயநலமற்ற, மக்கள் சேவையே மகேசன் சேவை என்று பாடுபட்டு வரும் கோடிக்கணக்கான தொண்டர்களைக் கொண்டுள்ளது ஆர்எஸ்எஸ்.

பூகம்பம், புயல், வெள்ளம், சுனாமி, விபத்துக்கள், பெருந்தொற்று போன்றவற்றால் மக்கள் பாதிக்கப்படும்போது, உடனடியாக களத்துக்குச் சென்று மக்களை மீட்டு அவர்களின் துயர் துடைக்கும் பணியில் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் சாதி, மத, மொழி, இன பாகுபாடு இன்றி தொண்டாற்றி வருவதை மக்கள் அறிவார்கள். ஆர்எஸ்எஸ் தொடங்கப்பட்ட நாளான விஜயதசமியை முன்னிட்டும், தேசத்துக்காக பாடுபட்ட மகான்களின் நினைவைப் போற்றும் வகையில் ஆண்டுதோறும் சீருடை அணிந்த ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் அணிவகுப்பு ஊர்வலம் நடத்துவது வழக்கம். ஆர்எஸ்எஸ் தொடங்கியதில் இருந்தே இத்தகைய ஊர்வலங்கள் நாடு முழுவதும் தொடர்ந்து நடந்து வருகின்றன. காஷ்மீர் முதல் கேரளா, மேற்கு வங்கம் என நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் அணிவகுப்பு ஊர்வலங்கள் அமைதியாகவும், நேர்த்தியாகவும் நடந்து வருகின்றன.

1963-ம் ஆண்டு டெல்லி குடியரசு தின ஊர்வலத்தில் ராணுவத்தினருடன் சேர்ந்து ஆர்எஸ்எஸ் தொண்டர்களையும் பங்கேற்க, அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேரு அழைப்பு விடுத்தார். அதையேற்று 3 ஆயிரம் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் சீருடையணிந்து குடியரசு தின அணிவகுப்பு ஊர்வலத்தில் பங்கேற்றனர். அத்தகைய சிறப்பு வாய்ந்த ஊர்வலத்திற்கு சமீப காலமாக தமிழக அரசு காவல்துறை மூலம் அனுமதி மறுப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளது.

சட்டத்தை மதிக்கும் நன்மக்களை உருவாக்கி வரும் ஆர்எஸ்எஸ், அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையை, நீதிமன்றங்களின் மூலம் பெற்றே அணிவகுப்பு ஊர்வலத்தை கடந்த ஆண்டு தமிழகத்தில் மாவட்டம் தோறும் நடத்தியது. இந்த ஆண்டு விஜயதசமி விழா அணிவகுப்பு ஊர்வலத்தை 2023 அக்டோபர் 29 ஞாயிற்றுக்கிழமை நடத்திட முடிவு செய்து, காவல் துறையிடம் இரு மாதங்களுக்கு முன்பே அனுமதி கோரி விண்ணப்பிக்கப்பட்டது. இதில் பங்குபெற மாவட்டம்தோறும் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் ஆர்வத்துடன் தயாராகி வருகின்றனர். ஆனால், தமிழகம் முழுவதும் காவல் துறையினர் அனுமதி வழங்காமல் காலம் தாழ்த்தியும், ஒரு சில மாவட்டங்களில் விண்ணப்பங்களை நிராகரிக்கவும் செய்தனர்.

இதைத் தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில், ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும் என காவல் துறைக்கு உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம், அனுமதியை நிகழ்ச்சி நடப்பதற்கு 5 தினங்களுக்கு முன்பே வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது. ஆனால், காவல் துறையினர் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி கடிதத்தை வழங்கவில்லை. இது நீதிமன்ற அவமதிப்பு செயலாகும்.

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, நாமக்கல், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட 22 மாவட்டங்களின் காவல் துறை கண்காணிப்பாளர்கள், துணை கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள், காவல்துறை தலைமை இயக்குநர், தமிழக உள்துறை செயலாளர் ஆகிய அதிகாரிகளின் மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆர்எஸ்எஸ் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர முடிவு செய்து வழக்கறிஞர்கள் மூலமாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

மேலும், அணிவகுப்பு ஊர்வலத்திற்கான அனுமதியைப் பெற ஆர்எஸ்எஸ் தொடர்ந்து சட்ட நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. சென்ற ஆண்டு தமிழகத்தில் மிகக் கட்டுப்பாட்டோடும், குறித்த நேரத்திலும் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலம் நடந்ததை கண்ட பொதுமக்கள் வெகுவாக பாராட்டினார்கள் என்பது உண்மை. இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ள உரிமையான ஊர்வலத்துக்கு உரிய அனுமதி பெற்று விரைவில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலம் நடத்தியே தீரும் என்பதை தெரிவித்துக் கொள்கிறன்" என்று ஆர்எஸ்எஸ் வட தமிழக தலைவர் குமாரசாமி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in