Published : 26 Oct 2023 11:57 AM
Last Updated : 26 Oct 2023 11:57 AM

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் சென்னை காவல் ஆணையர் சந்திப்பு

கோப்புப்படம்

சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் இன்று (அக்.26) சந்தித்து ஆலோசனை நடத்தினார். ஆளுநர் மாளிகை முன்பு நேற்று (புதன்கிழமை) பெட்ரோல் குண்டு வீசப்பட்ட நிலையில், இன்று இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

சென்னை கிண்டி சர்தார் படேல் சாலையில் ஆளுநர் மாளிகை உள்ளது. ஆளுநர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் செல்லும் நுழைவாயில் (எண் 1) முன்பு எப்போதுமே இரும்புத் தடுப்புகள் அமைத்தும், கயிறு கட்டியும் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு முடுக்கி விடப்பட்டிருக்கும். இந்நிலையில், புதன்கிழமை மதியம் 3 மணியளவில் கிண்டி சர்தர் படேல் சாலை வழியாக நடந்து வந்த இளைஞர் ஒருவர் திடீரென மறைத்து தயாராக கொண்டு வந்த பெட்ரோல் குண்டை ஆளுநர் மாளிகை நோக்கி வீசினார். அது ஆளுநர் மாளிகை நுழைவாயில் (எண் 1) முன்பு போடப்பட்டிருந்த இரும்புத் தடுப்புகள் முன் விழுந்து வெடித்து சிதறி லேசாக தீப்பற்றியது.

இதைக் கண்டு அங்கு பாதுகாப்புக்காக நின்றிருந்த போலீஸார்அதிர்ச்சி அடைந்தனர். பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பி ஓட முயன்ற இளைஞரை விரட்டிப் பிடித்தனர். அப்போது, அவரிடம் இருந்த பெட்ரோல் பாட்டில் ஒன்று விழுந்து உடைந்தது. இதையடுத்து, அவர் மறைத்து வைத்திருந்த மேலும் 2 பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டில்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு: இதையடுத்து, அந்த இளைஞர் கிண்டி போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். இதையடுத்து, கிண்டி காவல் நிலையத்தில் வைத்து அடையாறு காவல் மாவட்ட துணை ஆணையர் பொன் கார்த்திக் குமார், உதவி ஆணையர் சிவா ஆகியோர் தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தினர். இதில், பெட்ரோல் குண்டு வீசிய இளைஞர் சென்னை நந்தனம் எஸ்.எம்.நகரை சேர்ந்த பிரபல ரவுடி கருக்கா வினோத்(42) என்பது தெரியவந்தது. இவர் மீது ஏற்கெனவே 4 கொலை முயற்சி வழக்கு உள்பட 14 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

கைது செய்யப்பட்ட கருக்கா வினோத் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்துக்கு பாஜக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர்.

ஆளுநருடன் சந்திப்பு: இந்நிலையில், இன்று (அக்.26) சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் சந்தித்துப் பேசினார். அப்போது பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் குறித்தும், அதைத் தொடர்ந்து காவல்துறை தரப்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக ஆளுநரிடம் காவல் ஆணையர் எடுத்துக் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், இரண்டுநாள் சுற்றுப்பயணமாக இன்று தமிழக வரும் குடியரசுத் தலைவர் இரவு ஆளுநர் மாளிகையில் தங்க உள்ள நிலையில், மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் இந்த சந்திப்பின் போது, காவல் ஆணையர் பேசியதாக கூறப்படுகிறது. சென்னை விமான நிலையத்தில் இருந்து ஆளுநர் மாளிகை மற்றும் நாளை பட்டமளிப்பு விழா நடைபெறும் இடம் வரை எந்த மாதிரியான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பது குறித்து இந்த சந்திப்பின்போது ஆலோசனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x