Published : 26 Oct 2023 06:04 AM
Last Updated : 26 Oct 2023 06:04 AM

விபத்தில் இறந்தவரின் மனைவிக்கு கருணையுடன் வீடு கட்டிக் கொடுத்த காவல் துறை

காவல் துறையினர் கட்டித் தந்த வீட்டில், 5 பிள்ளைகளுடன் முத்துலட்சுமி. உடன், கடலூர் எஸ்.பி. ராஜாராம், டிஎஸ்பி ஆரோக்கிய ராஜ் உள்ளிட்டோர்.

விருத்தாசலம்: கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த மணலூர் கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல்-முத்துலட்சுமி தம்பதிக்கு 2 பெண் மற்றும் 3 ஆண் பிள்ளைகள் உள்ளனர். தொழிலாளியான சக்திவேல், கடந்த மார்ச் மாதம் வெண்கரும்பூர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, சாலை விபத்தில் உயிரிழந்தார்.

இதையடுத்து, விருத்தாசலம் டிஎஸ்பியை முத்துலட்சுமி சந்தித்து,தனது கணவர் மீது மோதிய வாகனத்தை கண்டுபிடித்து, உரிய இழப்பீடு பெற்றுத்தருமாறு கோரியுள்ளார். டிஎஸ்பி ஆரோக்கியராஜ் விபத்து குறித்து விசாரணை நடத்தியதில், சக்திவேல் தானாகவே இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்துஉயிரிழந்தது தெரியவந்தது.

இதுகுறித்து முத்துலட்சுமியிடம் விளக்கியபோது, தனக்கு 5 பிள்ளைகள் உள்ளநிலையில் கணவரும் இறந்துவிட்டதால், தனது குடும்பத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விட்டதாக வேதனையுடன் தெரிவித்துள்ளார்.அவரது குடும்பச் சூழலை அறிந்த டிஎஸ்பி ஆரோக்கியராஜ், சககாவலர்களிடம் பேசி, அவரது குடும்பத்துக்கு உதவ முயற்சி மேற்கொண்டுள்ளார். முத்துலட்சுமியின் பிள்ளைகளை திண்டிவனம், கடலூரில் உள்ள அரசுப் பள்ளிகளில் சேர்த்துள்ளனர்.

மேலும், சில தன்னார்வ அமைப்புகளை அணுகி, செங்கல், கம்பி, சிமென்ட்,ஜல்லி உள்ளிட்டவற்றை பெற்று, காவலர்கள் நிதியுதவியுடன் சுமார் ரூ.10 லட்சம் மதிப்பில் கான்கிரீட் வீடு கட்டி தந்துள்ளனர். அவ்வாறு கட்டிய வீட்டுக்கு ‘கருணை இல்லம்’ என பெயர் சூட்டி, கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் தலைமையில் நேற்று விழா நடத்தி,அந்த வீட்டை முத்துலட்சுமியிடம் ஒப்படைத்துள்ளனர். முன்னதாக, வீட்டுக்குத் தேவையான உபகரணங்களை, காவலர்கள் ஊர்வலமாக எடுத்துவந்து, முத்துலட்சுமிக்கு வழங்கினர்.

இதுகுறித்து டிஎஸ்பி ஆரோக்கியராஜ் கூறும்போது, “கணவர் உயிரிழந்த நிலையில், ஆதரவற்று இருந்த பெண்ணின் நிலையை உணர்ந்து, சமூக அக்கறையுடன், நல்ல உள்ளங்களின் உதவிகளைப் பெற்று, வீடு கட்டித் தந்துள்ளோம். இதை விளம்பரத்துக்காக செய்யவில்லை. ஒரு முன்னுதாரண நிகழ்வாகவே இதில் ஈடுபட்டோம். மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் பல்வேறு வகைகளில் உதவினார். அவருக்கு எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x