

சென்னை: ஆம்னி பேருந்து உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்று சிறைபிடிக்கப்பட்ட பேருந்துகளை விடுவிக்கும் நடவடிக்கையை போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தொடங்கினர்.
தமிழகத்தில் ஆயுத பூஜை தொடர் விடுமுறையையொட்டி, ஆம்னி பேருந்துகளில் சோதனை நடத்தப்பட்டது. இதில், விதிமீறி இயக்கப்பட்ட 119 ஆம்னி பேருந்துகளை போக்குவரத்துத் துறை அதிகாரிகள் சிறைபிடித்தனர். இதனால்அதிருப்தி அடைந்த ஆம்னி பேருந்துஉரிமையாளர்கள் வேலைநிறுத்தம் செய்வதாக நேற்று முன்தினம்காலை அறிவித்தனர்.
இதைத்தொடர்ந்து, இணை ஆணையர்ஏ.ஏ.முத்து தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, வழக்கம்போல் ஆம்னி பேருந்துகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டது.
அதேநேரம், சிறைபிடிக்கப்பட்ட ஆம்னி பேருந்துகளை விடுவிக்கவேண்டும் என்பதே பேச்சுவார்த்தையின்போது உரிமையாளர்கள் முன்வைத்த முதன்மையான கோரிக்கையாகும். ஆனால், நேற்று காலை வரை பேருந்துகள் விடுவிக்கப்படவில்லை. இதனால்சென்னை, எழிலகத்தில் போக்குவரத்துத் துறை ஆணையரை சந்தித்து உரிமையாளர்கள் பேருந்துகளை விடுவிக்குமாறு வலியுறுத்தினர்.
இதனையடுத்து, தவறிழைக்காத பேருந்துகளை விடுவிக்கும் நடவடிக்கையை போக்குவரத்துத் துறையினர் தொடங்கினர். இதையடுத்து தமிழகம் முழுவதும் தவறிழைக்காத ஆம்னி பேருந்துகளை விடுவிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.