

சென்னை: பயணிகள் வசதிகளை அதிகரிக்க சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து பெரிய நிறுவன அலுவலகம் வரை இணைப்பு வாகன வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதை மேலும் மேம்படுத்தும் வகையில், மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து பெரிய நிறுவனங்கள், குடியிருப்பு பகுதிகளை இணைக்கும் விதமாக, பேட்டரி வாகன வசதியை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: மெட்ரோ ரயில்களில் பயணிகளின் வருகையை அதிகரிப்பதற்கான பணிகளை மேற்கொண்டுவருகிறோம். இதற்காக, பெரிய நிறுவன அலுவலகங்கள், குடியிருப்பு பகுதிகளில் இருந்து மெட்ரோ ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில், இணைப்பு வாகன வசதியை அதிகரிக்க, தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
அதன்படி, மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து 4 கி.மீ. தொலைவுக்குள் உள்ள முக்கிய நிறுவனங்கள், குடியிருப்பு பகுதிகளுக்கு பேட்டரியில் ஓடும் ஆட்டோ, ஷேர்ஆட்டோ, வேன் போன்ற வாகனங்களை இயக்க திட்டமிட்டுள்ளோம்.
முதல்கட்டமாக அண்ணாநகர், விமான நிலையம், ஆலந்தூர் உள்ளிட்ட மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து இயக்க, ஒப்பந்ததாரர்களை தேர்வு செய்வதற்கான ஆரம்பக் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்றனர்.