Published : 26 Oct 2023 04:08 AM
Last Updated : 26 Oct 2023 04:08 AM

நடுத்தர வயதினரை ஈர்க்கும் நெல்லை - சென்னை வந்தே பாரத் ரயில்: 77% பேர் குடும்பத்தினருடன் பயணம்

வந்தே பாரத் ரயில். (கோப்பு படம் )

மதுரை: நெல்லை - சென்னை ‘வந்தே பாரத்’ ரயில் நடுத்தர வயதினரை வெகுவாக ஈர்த்துள்ளது. இதுவரை 77 சதவீதம் பேர் தங்களது குடும்பத்தினருடன் பயணித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நெல்லை - சென்னை இடையே செப்.24 முதல் ‘வந்தே பாரத்’ ரயில் இயக்கப்படுகிறது. சென்னை எழும்பூர்-நெல்லை வந்தே பாரத் ரயிலில் இதுவரை 77 சதவீதம் பேர் குடும்பத்துடன் பயணம் செய்துள்ளனர். 16 சதவீத அளவில் வர்த்தகர்கள் பயணித்துள்ளனர். மொத்தத்தில் 36 சதவீத அளவில் 35 வயது முதல் 49 வயதினரும், 64 சதவீதம் பிற வயதினரும் இந்த ரயிலில் விரும்பி பயணிப்பதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து அவர்கள் மேலும் கூறியது: தெற்கு ரயில்வே பிரிவில் 6 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. சென்னை - மைசூரு, சென்னை - கோவை, சென்னை - நெல்லை, சென்னை - விஜயவாடா பிரிவில் தலா ஒரு வந்தே பாரத் ரயிலும், கோட்டயம் மற்றும் ஆலப்புழை வழியாக திருவனந்தபுரம் - காசர்கோடு பிரிவில் இரு தனித் தனி வந்தே பாரத் ரயில்களும் இயக்கப்படுகின்றன.

இந்த ரயில்களில் எதிர்பாராத அளவில் அதிகம் பேர் பயணிக்கின்றனர். பிற ரயில்களை காட்டிலும், இந்த ரயில்களின் வேகம், விமான பயணத்துக்கு இணையான வசதி, இணையதள சேவை உதவியுடன் கூடிய மின்னணு தகவல் பலகைகள், நவீன இருக்கைகள், மாற்றுத் திறனாளிகளுக்கென தனி கழிப்பறை,

நவீன இருக்கை, அவசர உதவிக்கு ரயில் லோகோ பைலட்டுடன் தொடர்பு கொள்ள டெலிபோன், சிசிடிவி கண்காணிப்பு, தானியங்கி டிஜிட்டல் கதவுகள் ஒவ்வொரு இருக்கை அருகிலும் மொபைல் சார்ஜிங், எக்ஸிகியூட்டிவ் வகுப்பில் இருக்கைகளை திருப்பி ஜன்னல் வழியாக நேரடியாக வேடிக்கை பார்க்கும் வசதி, காற்றழுத்தத்தில் இயங்கும் சுத்தமான கழிப்பறை ஆகிய வசதிகள் உள்ளன. இதுபோன்ற நவீன வசதிகள் பயணிகளை வெகுவாக ஈர்க்கின்றன. இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x