

திருச்சி: திருச்சி அருகே குண்டூரில் அரசு புறம்போக்கு இடத்தில் அமைக்கப்பட்டிருந்த 100 அடி உயர திமுக கொடிக் கம்பத்தை அகற்றும் பணி, உயர் நீதிமன்ற உத்தரவின்படி நேற்று தொடங்கியது.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவைமுன்னிட்டு, திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில், திருவெறும்பூர் ஒன்றியம் குண்டூர் பகுதியில் புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையையொட்டி 100 அடி உயரகொடிக் கம்பம் அமைக்கப்பட்டிருந்தது. அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி முன்னிலையில், திமுக பொருளாளரும் எம்.பியுமானடி.ஆர்.பாலு ஆக.22-ம் தேதி இந்த கொடிக் கம்பத்தில் கொடியேற்றி வைத்தார்.
இந்நிலையில், போக்குவரத்துக்கு இடையூறாகவும், ஆபத்தை விளைவிக்கும் வகையிலும் அரசு புறம்போக்கு இடத்தில் உள்ள இந்தக் கொடிக் கம்பத்தை அகற்ற உத்தரவிட வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளையில் திருச்சி விமானநிலைய பகுதியைச் சேர்ந்த குரு ராஜ் வழக்கு தொடர்ந்திருந்தார்.
வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கொடிக் கம்பத்தை 15 நாட்களில் அகற்றி, அறிக்கை தாக்கல் செய்ய திருச்சி ஆட்சியருக்கு உத்தரவிட்டது. ஆனால், நீதிமன்ற உத்தரவை பின்பற்றாததால், ஆட்சியர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி மீண்டும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், விக்டோரியா கவுரி ஆகியோர், ‘‘ஆளுங்கட்சி கொடிக் கம்பம் என்பதால் ஆபத்து ஏற்படுத்தும் வகையில் இருப்பதை அனுமதிக்க முடியாது. சட்டம் என்பது ஆளுங்கட்சி உள்ளிட்ட அனைத்து கட்சிகளுக்கும் ஒன்று தான். ஆளுங்கட்சி கொடிக் கம்பம் என்பதால் நீதிமன்றம் உத்தரவிட்டும் ஆட்சியர் அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை என்பது உத்தரவை மதிக்காத செயலாகும்.
இந்த கொடிக் கம்பத்தை அக்.31-ம் தேதிக்குள் திருச்சி ஆட்சியர் அகற்றி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’’ என அக்.17-ம் தேதி உத்தரவிட்டனர். இந்நிலையில், அந்தக் கொடிக்கம்பத்தை அருகில் உள்ள தனியாருக்கு சொந்தமான இடத்தில் வைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக கொடிக் கம்பத்தின் கீழ் வைக்கப்பட்டிருந்த கல்வெட்டுகளை அகற்றும் பணி நேற்று தொடங்கியது. இன்னும் ஓரிரு நாட்களில் கொடிக் கம்பம் அகற்றப்பட்டு வேறு இடத்தில் வைக்கப்படும் என திமுகவினர் தெரிவித்தனர்.