அகவிலைப்படி  உயர்வு முதல் பாடப் புத்தகத்தில் ‘பாரத்’ வரை - செய்தித் தெறிப்புகள் 10 @ அக்.25, 2023

அகவிலைப்படி  உயர்வு முதல் பாடப் புத்தகத்தில் ‘பாரத்’ வரை - செய்தித் தெறிப்புகள் 10 @ அக்.25, 2023
Updated on
2 min read

தமிழக அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு: அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தற்போது வழங்கப்படும் 42 சதவீத அகவிலைப்படி, முன்தேதியிட்டு ஜூலை 01 முதல் 46 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த அகவிலைப்படி உயர்வால், சுமார் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆண்டு ஒன்றுக்கு அரசுக்கு 2546 புள்ளி 16 கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

10 வாரங்களில் 10,000 மருத்துவ முகாம்கள் நடத்த திட்டம்: மழைக்காலங்களில் ஏற்படும் நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் விதமாக, மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் இம்மாதம் 29-ம் தேதி தொடங்கி டிசம்பர் 31 வரை, 10 வாரங்கள் தலா 1,000 இடங்களில் நடத்தப்படவிருக்கிறது என்று தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

‘சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம்’ - அமைச்சர் மீண்டும் வலியுறுத்தல்: தமிழ்நாட்டைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்களின் மீது உண்மையிலேயே ஆளுநருக்கு அக்கறை இருந்தால், கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்க ஒப்புதல் அளிக்க வேண்டும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வலியுறுத்தியுள்ளார்.

இதனிடையே, "நாட்டின் விடுதலைக்கு போராடிய வீரர்களையும், தியாகிகளையும் தேடி, தேடி பெருமைப்படுத்தும் தமிழக அரசின் கொள்கைக்கு எதிராக பகைமையும். வெறுப்பும் பரப்பும் தரம் தாழ்ந்த பிரச்சாரகராக செயல்படும் ஆளுநர் ஆர்.என்.ரவி கூட்டாட்சி கோட்பாட்டினை தகர்த்து வருகிறார்" என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் குற்றம் சாட்டியுள்ளார்.

‘சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுக’: "தமிழகத்தைச் சேர்ந்த எத்தனை சுதந்திரப் போராட்ட வீரர்களின் பெயர்கள் பாடப் புத்தகத்தில் இருக்கிறது என்று திமுக அரசு ஒரு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்" என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

தேர்தல் ஆணையத்திடம் தமிழக கட்சிகள் முன்வைத்த கோரிக்கைகள்: வாக்காளர் பட்டியல் திருத்த பணி வரும் 27-ம் தேதி தொடங்க உள்ள நிலையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில், பயோமெட்ரிக் முறையில் வாக்களிக்கும் வசதி ஏற்படுத்த வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

வாக்குச்சாவடி பெண் பணியாளர்களுக்கு இ-டாய்லெட் வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை திமுக முன்வைத்தது.

பெயர் சேர்த்தல் மற்றும் நீக்குதல் தொடர்பான படிவங்களை பாரபட்சம் இல்லாமல் அனைத்துக் கட்சியினருக்கும் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை அதிமுக முன்வைத்தது.

சிபிஎஸ்இ பாடப் புத்தகங்களில் ‘இந்தியா’ பெயரை மாற்ற திட்டம்: சி.பி.எஸ்.இ பாடப் புத்தகங்களில் ‘இந்தியா’ என்பதற்கு பதில் ‘பாரத்’ என்று மாற்ற என்.சி.இ.ஆர்.டி குழு பரிந்துரைத்துள்ளது என அந்தக் குழுவின் தலைவர் ஐஸக் தெரிவித்துள்ளார்.

“கேள்வி அதானி பற்றியது அல்ல... நாடாளுமன்ற கண்ணியம் பற்றியது”: “இங்கே கேள்வி அதானி விவகாரம் பற்றியது இல்லை... நாட்டின் பாதுகாப்பு, குற்றம்சாட்டப்பட்ட எம்பியின் ஊழல் மற்றும் குற்றச் செயல் பற்றியது” என்று மஹுவா மொய்த்ராவின் குற்றச்சாட்டுக்கு பதிலடியாக பாஜக எம்.பி நிஷிகாந்து துபே தெரிவித்துள்ளார். முன்னதாக, தன்மீதான கேள்வி கேட்க லஞ்சம் வாங்கிய புகாருக்கு பதில் அளித்திருந்த மஹுவா, "போலி பட்டாதாரி மற்றும் பிற பாஜக பிரமுகர்கள் மீதான உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளன. சபாநாயகர் அவைகளை எல்லாம் முடித்த பின்னர் என் மீதான குற்றசாட்டுக்கு விசாரணை குழு அமைக்கட்டும்" என்று தெரிவித்திருந்தார்.

“5 மாநில தேர்தல்... 2024-க்கான செமி ஃபைனல் அல்ல”: அடுத்த மாதம் நடைபெற உள்ள 5 மாநில தேர்தல், 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான செமி ஃபைனல் அல்ல என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். மேலும், ஒவ்வொரு மாநிலத்திலும் பிரச்சினைகள் வெவ்வேறாக இருக்கின்றன. அதன் அடிப்படையில்தான் மக்கள் வாக்களிப்பார்கள். சட்டப்பேரவைத் தேர்தலில் இருந்து நாடாளுமன்றத் தேர்தல் மிகவும் வித்தியாசமானது என்று தெரிவித்துள்ளார்.

முன்னாள் வீரர்களிடம் உதவி கேட்ட பாகிஸ்தான் அணி: பாகிஸ்தான் அணியை மேம்படுத்த அந்நாட்டு முன்னாள் வீரர்களின் உதவியை பெற பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. நடப்பு உலகக் கோப்பை தொடரில் நெதர்லாந்து மற்றும் இலங்கையை வீழ்த்திய பாகிஸ்தான், அதன்பின் இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கனிஸ்தான் என அடுத்தடுத்து மூன்று போட்டிகளில் ஹாட்-ட்ரிக் தோல்வியை தழுவி உள்ளது. இதனால் தொடரைவிட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஹமாஸுக்கு எதிராக அடுத்த கட்ட போருக்கு தயார்: இஸ்ரேல்: பாலஸ்தீனத்தின் காசா பகுதி ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக அடுத்த கட்ட போருக்கு தயாராகிறோம் என்று இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. "எங்களை பொறுத்தவரை ஹமாஸ் தீவிரவாதிகளை கூண்டோடு அழிக்க வேண்டும். இதன்படி காசாவில் தரைவழி தாக்குதல் நடத்த தயார் நிலையில் இருக்கிறோம்" என்று இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் டேனியல் கூறியுள்ளார்.

இதனிடையே, மத்திய கிழக்கில் நிலைமை நேரத்துக்கு நேரம் மோசமாகி வருவதாக கூறிய ஐநா பொதுச்செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ், போரில் பொதுமக்களின் பாதுகாப்பு முக்கியமானதாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in