Published : 30 Jan 2018 02:25 PM
Last Updated : 30 Jan 2018 02:25 PM

குறைக்கப்படாத பேருந்துக் கட்டணம்; அரசே மோசடி செய்வதா?- அன்புமணி கண்டனம்

கட்டணக் குறைப்பின் பயன்கள் சென்னை மாநகர மக்களுக்கு கிடைக்கவில்லை. சென்னையில் இயக்கப்படும் சாதாரணப் பேருந்துகளில் அனைத்து நிலைகளில் உயர்த்தப்பட்டக் கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படுகிறது. உதாரணமாக, 13 நிலைகள் கொண்ட தொலைவுக்கு உயர்த்தப்பட்ட கட்டணம் ரூ.15 ஆகும்.

அதேபோல், 15 நிலைகள் கொண்ட தொலைவுக்கு உயர்த்தப்பட்டக் கட்டணம் ரூ.17 ஆகும். கட்டணக் குறைப்புக்குப் பிறகும் இதே கட்டணத்தை வசூலிப்பது மிகப்பெரிய மோசடியாகும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளை ஏற்று தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட கட்டணக் குறைப்பு சென்னையில் மட்டும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

சாதாரணப் பேருந்துகளில் தொடர்ந்து உயர்த்தப்பட்டக் கட்டணமே வசூலிக்கப்படுகிறது. பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று கட்டணத்தைக் குறைப்பதாக அறிவித்த தமிழக அரசு, அதை செயல்படுத்தாதது கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டில் ஆண்டுக்கு 3500 கோடிக்கும் அதிகமாக கட்டணங்களை உயர்த்திய பினாமி அரசு,  அதற்கு எதிராக மக்கள் மத்தியில் எழுந்த கொந்தளிப்பை புரிந்து கொண்டு ஒரு நாளைக்கு ரூ. 2 கோடி அளவுக்கு கட்டணத்தைக் குறைப்பதாக கடந்த 28&ஆம் தேதி அறிவித்தது. இக்கட்டணக் குறைப்பு நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் இக்கட்டணக் குறைப்பு நடைமுறைப் படுத்தப்பட்ட நிலையில், சென்னையில் மாநகரப் பேருந்துகளில் மட்டும் கட்டணம் குறைக்கப்படவில்லை. மாறாக, புதிய காரணங்களைக் கூறி உயர்த்தப்பட்ட கட்டண விகிதமே தொடர்ந்து வசூலிக்கப்படுகிறது.

மாநகரப் பேருந்துகளில் குறைந்தப்பட்சக் கட்டணம் 5 ரூபாயிலிருந்து 4 ரூபாயாக குறைக்கப்படுவதாக  அரசு அறிவித்தது. ஆனால், நேற்று அனைத்து மாநகரப் பேருந்துகளிலும் குறைந்தப்பட்சக் கட்டணமாக  5 ரூபாய் தான் தொடர்ந்து வசூலிக்கப்படுகிறது. இது தொடர்பாக மாநகரப் போக்குவரத்துக் கழக அதிகாரிகளிடம் விசாரித்த போது, மாநகரப் போக்குவரத்துக் கட்டணம் அனைத்து நிலைகளிலும் தலா ஒரு ரூபாய் குறைக்கப்பட்டிருப்பதாகவும், அத்துடன் விபத்துக் காப்பீட்டு வரி ரூ.1 சேர்க்கப்பட்டு இருப்பதால் முந்தையக் கட்டணமே வசூலிக்கப்படுவதாக தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த 19&ஆம் தேதி தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில் நகர் மற்றும் புறநகர் பேருந்துகளுக்கு மட்டும் தான் காப்பீட்டு வரி விதிக்கப்பட்டிருந்தது. மாநகரப் பேருந்துகளுக்கு அந்த வரி விதிக்கப்படவில்லை.

ஆனால், எந்த வித அறிவிப்பும் இல்லாமல் மாநகரப் பேருந்துகளுக்கும் காப்பீட்டு வரியை நீட்டித்துள்ள தமிழக அரசு, ஒவ்வொரு பயணியிடமிருந்தும் கூடுதலாக ஒரு ரூபாயை வசூலித்து வருகிறது. இதனால் கட்டணக் குறைப்பின் பயன்கள் சென்னை மாநகர மக்களுக்கு கிடைக்கவில்லை. சென்னையில் இயக்கப்படும் சாதாரணப் பேருந்துகளில் அனைத்து நிலைகளில் உயர்த்தப்பட்டக் கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படுகிறது. உதாரணமாக, 13 நிலைகள் கொண்ட தொலைவுக்கு உயர்த்தப்பட்ட கட்டணம் ரூ.15 ஆகும். அதேபோல், 15 நிலைகள் கொண்ட தொலைவுக்கு உயர்த்தப்பட்டக் கட்டணம் ரூ.17 ஆகும். கட்டணக் குறைப்புக்குப் பிறகும் இதே கட்டணத்தை வசூலிப்பது மிகப்பெரிய மோசடியாகும்.

தமிழ்நாட்டில் பெரும்பாலான வழித்தடங்களில் அரசுப் பேருந்துகளை விட தனியார் பேருந்துகளில் குறைந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது. உதாரணமாக கும்பகோணத்திலிருந்து பாபநாசத்திற்கு அரசுப் பேருந்துகளில் ரூ.15 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், தனியார் பேருந்துகளில் ரூ.12 மட்டுமே வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டணத்திலேயே தனியார் பேருந்துகளுக்கு அதிக லாபம் கிடைப்பதாகக் கூறப்படும் நிலையில் அரசுப் பேருந்துகளில் மட்டும் அளவுக்கு அதிகமாக கட்டணம் வசூலிக்கப்படுவது ஏன்? என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை.

இவ்வளவு கட்டணம் உயர்த்தப்பட்ட பிறகும் அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் தினமும் ரூ.4 கோடி இழப்பில் தான் இயங்கும் எனும் போது போக்குவரத்துக் கழகங்களில் நிர்வாகச் சீர்குலைவும், ஊழலும் தலைவிரித்து ஆடுவதாகத் தான் கருதத் தோன்றுகிறது.

தமிழக அரசின் மோசடிக் கட்டண வசூலையும், போக்குவரத்துக் கழகங்களில் நிலவும் ஊழல் மற்றும் முறைகேடுகளையும் ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே, தமிழ்நாட்டில் உயர்த்தப்பட்ட பேருந்துக் கட்டணத்தை முற்றிலுமாக திரும்பப் பெறுவதற்கு பினாமி அரசு முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறேன்"

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x