Published : 25 Oct 2023 05:24 AM
Last Updated : 25 Oct 2023 05:24 AM
சென்னை: தமிழகத்தில் 285 கிராமப்புற சாலைகளை மேம்படுத்துதல், 141 பாலங்கள் கட்டும் திட்டத்துக்காக நபார்டு வங்கி சார்பில் ஒதுக்கப்பட்ட ரூ.781.09 கோடி நிதியை தமிழக அரசு விடுவித்துள்ளது.
இதுகுறித்து ஊரக வளர்ச்சித்துறை செயலர் செந்தில்குமார் வெளியிட்ட அரசாணை:
மாவட்ட வாரியாக தேவைப்படும் சாலைகள், பாலங்களுக்கான விரிவான திட்ட அறிக்கைகளை வாகன அடர்த்தி உள்ளிட்ட விவரங்களுடன் அளிக்கும்படி அனைத்து மாவட்ட நிர்வாகங்களுக்கும் ஊரக வளர்ச்சி இயக்குநர் அறிவுறுத்தியிருந்தார். அதன்படி, வரப்பெற்ற 255 சாலைகளின் விரிவான திட்ட அறிக்கைகள் அடிப்படையில் ரூ.255.95 கோடி நிதி கோரி கடந்த ஆக.8-ம் தேதி நபார்டு வங்கியிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து மேலும், 30 கிராமப்புற சாலைகள் மேம்பாட்டுக்காகவும், 141 பாலங்கள் கட்டுவதற்காகவும் ரூ.525.14 கோடி கேட்டு கருத்துரு அனுப்பப்பட்டது. இதையடுத்து, மொத்தமாக 520.68 கிமீ தொலைவுள்ள 285 சாலைகளுக்கு ரூ.285.20 கோடியும், 141 பாலங்கள் கட்டுவதற்கு ரூ. 595.88 கோடியும் தேவை என்பதை சுட்டிக்காட்டி தேவையான நடவடிக்கை எடுக்கும்படி கோரப்பட்டது. இதில், ரூ.153.42 கோடி மதிப்பிலான 35 பாலங்கள், ரூ.20.82 கோடியில் மேம்படுத்தப்பட வேண்டிய 13 சாலைகள், உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட கோரிக்கைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இவற்றை பரிசீலித்த தமிழக அரசு, நபார்டு வங்கியின் நிதியுதவி திட்டத்தின் கீழ், 285 கிராமப்புற சாலைகளை மேம்படுத்தவும், 141 பாலங்கள் கட்டவும் ரூ.781.09 கோடி ஒதுக்குவதற்கான நிதி அனுமதியை வழங்கியுள்ளது. இதில் ரூ.245.82 கோடி ஏற்கெனவே பட்ஜெட் மதிப்பீடுகளில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், கூடுதலாக ரூ.535.27 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த பணிகளை ஊரக வளர்ச்சி இயக்குநர் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT