

சேலம்: நாடாளுமன்றத் தேர்தல் மட்டுமின்றி வரும் 2026-ம் ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை, என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தெரிவித்தார்.
சேலம் மாவட்டம் ஓமலூரில் நேற்று செய்தியாளர்களிடம் மேலும் அவர் கூறியதாவது:
கடந்த இரண்டரை ஆண்டு திமுக ஆட்சியில், அதிமுக ஆட்சியின்போது கொண்டு வரப்பட்ட திட்டங்களைத்தான் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்து வருகிறார். அத்திக்கடவு - அவிநாசி திட்டம் 90 சதவீதம் பணிகள் அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட நிலையில், கடந்த இரண்டரை ஆண்டுகளாக 10 சதவீதம் பணியை முடிக்காமல் திமுக ஆட்சி கிடப்பில் போட்டுள்ளது. இதேபோல, மேட்டூர் அணை உபரி நீர்த் திட்டத்தின் மூலம் 100 ஏரிகளை நிரப்பும் திட்டமும் கிடப்பில் உள்ளது.
திமுக தேர்தல் அறிக்கையில் கூறிய 520 வாக்குறுதிகளையும் 100 சதவீதம் நிறைவேற்றியதாக கூறுவது உண்மையல்ல. முதியோர் உதவித் தொகை உயர்வு, கல்விக் கடன் ரத்து, 100 நாள் வேலைத் திட்டம் 150 நாளாக உயர்வு, பெட்ரோல் - டீசல் விலை குறைப்பு என பல்வேறு வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. மின் கட்டணம் 12 சதவீதம் முதல் 50 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.
தேர்தல் நேரத்தில் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் ரூ.1,000 உதவித் தொகை என அறிவித்து விட்டு, இப்போது தகுதியானவர்களுக்கு எனக் கூறுவது ஏமாற்று வேலை. இதேபோல, நீட் தேர்வு ரத்துக்கு முதல் கையெழுத்து என சொல்லிவிட்டு ஸ்டாலின் ஏமாற்றி வருகிறார். நீட் தேர்வு ரத்து ரகசியம் தெரியும் என கூறிய அமைச்சர் உதயநிதி, இப்போது கையெழுத்து இயக்கம் நடத்துவது வேடிக்கை. மக்களவைத் தேர்தலில் மக்கள் திமுகவுக்கு முட்டை வழங்குவார்கள்.
எங்களைப் பொறுத்தவரை பாஜக கூட்டணியில் இருந்து விலகி விட்டோம். அதனால் முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார். சிறுபான்மை மக்களுக்கு நன்மை செய்வதுபோல திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் ஒரு தோற்றத்தை உருவாக்கியிருந்தன. பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகிய பிறகு சிறுபான்மை மக்கள் எங்களைச் சந்திப்பதை அவரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அதனால் வெறுப்பு பேச்சு பேசி வருகிறார்.
மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையில் வலுவான கூட்டணி அமையும். 2024-ம் ஆண்டில் மட்டுமல்ல 2026-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை. காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட நெருக்கடி நிலையில் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட முதல்வர் ஸ்டாலின், பின்னர் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்கிறார். ஆட்சி அதிகாரத்துக்காக யாரிடம் வேண்டுமானாலும் கூட்டணி வைப்பார்கள்.
கொள்கைக்கும் திமுக கூட்டணிக்கும் சம்பந்தம் இல்லை. மத்தியில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் திமுக சார்பில் அமைச்சர்களை கொண்டுவரப் பார்க்கிறார்கள். அது கட்சியல்ல. கார்ப்பரேட் கம்பெனி போல செயல்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.