

சென்னை: கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக பாஜகவில் பணியாற்றியவர் நடிகை கவுதமி. அவர் கட்சியில் இருந்து விலகுவதாக நேற்று முன்தினம் அறிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
என்னுடைய 17 வயதிலிருந்து நான் வேலை செய்து கொண்டிருக்கிறேன். நானும் என் மகளும் பாதுகாப்பான சூழலில் இருக்க வேண்டிய ஒரு கட்டத்தில் இருக்கிறோம். ஆனால் பாஜக நிர்வாகியான சி.அழகப்பன் என்னுடைய பணம், சொத்து, ஆவணங்களை ஏமாற்றிவிட்டார். மேலும் அழகப்பன் சட்டத்திலிருந்து தப்பிக்கவும், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு 40 நாட்களாக அவர் தலைமறைவாக இருப்பதற்கும் சில மூத்த பாஜக உறுப்பினர்கள் உதவி செய்திருப்பதை அறிந்து நொறுங்கிப் போனேன். 25 ஆண்டுகாலம் கட்சிக்குத் தொடர்ந்து விசுவாசமாக இருந்தபோதும், எனக்கு முற்றிலுமாக ஆதரவு இல்லை. எனவே, கனத்த இதயத்துடனும், கடும் அதிருப்தியுடனும் பாஜகவில் இருந்து விலக முடிவு செய்திருக்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறும்போது, “கவுதமி குற்றம்சாட்டிய நபர் பாஜகவின் எந்த பொறுப்பிலும் இல்லை. அவருடன் நானும் மூத்த நிர்வாகிகளும் பேசியது கிடையாது. இந்த விவகாரத்தில் கட்சி அளவிலும் தனிப்பட்ட முறையிலும் கவுதமியுடன் நிற்கிறேன். இதில் காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கவுதமியிடம் நான் பேசியிருந்தேன். கட்சியில் யாராவது குற்றவாளியை காப்பாற்ற முயற்சித்தாலும் அவர் குறித்த விவரத்தையும் என்னிடம் தெரிவிக்குமாறு கூறியுள்ளேன். கவுதமி கட்சியில் தொடர்ந்தாலும் இல்லாவிட்டாலும் அவருக்கு பாஜக நிச்சயம் உதவும்” என்றார்.
பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு தனது சமூக வலைதள பக்கத்தில், கவுதமி வெளியேறியது வருத்தமளிப்பதாக கூறியுள்ளார்.