Published : 25 Oct 2023 04:00 AM
Last Updated : 25 Oct 2023 04:00 AM

கோவையில் டிஜிட்டல் எக்ஸ்-ரே வாகனம் மூலம் காசநோய் கண்டறியப்பட்ட 59 பேருக்கு சிகிச்சை

கோவையில் இலவச டிஜிட்டல் எக்ஸ்-ரே வாகனத்தில் பரிசோதனை செய்துகொள்ள காத்திருந்தோர். (கோப்பு படம்)

கோவை: கோவையில் இலவச டிஜிட்டல் எக்ஸ்-ரே வாகனம் மூலம் காச நோய் கண்டறியப்பட்டு, இதுவரை 59 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.

காச நோயால் (டிபி) பாதிக்கப் பட்டவரின் சளி, இருமல், தும்மலில் இருந்து காற்றில் நீர் திவலைகள் பரவி மற்றவர்களுக்கும் காச நோய் ஏற்படுகிறது. இருமல், மாலை நேர காய்ச்சல், உடல் எடை குறைதல், பசியின்மை, சோர்வடைதல், இரவு நேரங்களில் வியர்வை, சளியில் ரத்தம் ஆகிய அறிகுறிகளில் ஏதேனும் ஒன்று இருந்தாலும், பரிசோதனை மேற்கொள்வது அவசியம்.

இவ்வாறு காச நோய் அறிகுறி உள்ளவர்களை கண்டறிய, தமிழக அரசின் சார்பில் கோவையில் இலவசமாக டிஜிட்டல் எக்ஸ்-ரே வாகனம் மூலம் பொது மக்களிடம் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த 2022 ஜூலை முதல் 2023 செப்டம்பர் வரை கோவை மாவட்டத்தில் 6,667 பேருக்கு எக்ஸ்-ரே பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், தற்போது வரை மொத்தம் 59 பேருக்கு காசநோய் இருப்பது கண்டறியப் பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக சுகாதாரத் துறை துணை இயக்குநர் (காசநோய்) சக்திவேல் கூறியதாவது: தமிழக அரசு அளித்துள்ள வாகனத்தில் டிஜிட்டல் எக்ஸ்-ரே கருவி உள்ளது. இந்த வாகனமானது ‘வருமுன் காப்போம்’ திட்ட முகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு வருவோருக்கு இலவசமாக எக்ஸ்-ரே பரிசோதனை செய்ய முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. எக்ஸ்-ரே எடுத்த பின்பு அந்த படங்களை மருத்துவ அதிகாரி பார்வையிடுவார்.

அதில், காச நோய் இருப்பதாக சந்தேகம் இருந்தால், நோயாளியை பின்னர் தொடர்பு கொண்டு சளி மாதிரி சேகரிக்கப்படும். அதில், காச நோய் உறுதியானால் அவர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. காச நோயால் பாதிக்கப்படு வோரில் பெரும்பாலானோர் ஏழை தொழிலாளர்களாக உள்ளனர். எனவே, தொழில் நிறுவனங்களுக்கு நேரடியாக சென்றும் வாகனம் மூலம் இலவசமாக பரிசோதனை செய்து வருகிறோம்.

அண்மையில் வால்பாறையில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் இருக்கும் இடத்துக்கே சென்று பரிசோதனை மேற்கொண்டோம். இவ்வாறு தொழில் நிறுவனங்கள், தொழிலாளர்கள் பணிபுரியும் இடங்களுக்கு செல்லும்போது முன்கூட்டியே தகவல் தெரிவிப்பதோடு, காச நோய் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களையும் வழங்கி வருகிறோம். கோவை மாவட்டத்துக்கு காச நோய்க்கென 4 மருத்துவ அலுவலர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர்.

தற்போது எக்ஸ்-ரே எடுத்த பிறகு மருத்துவ அலுவலர்களுக்கு படத்தை அனுப்பி காச நோய் பாதிப்பு உள்ளதா என கேட்டறிந்து வருகிறோம். வரும் நாட்களில் ஒரு மருத்துவ அலுவலரையும் நடமாடும் வாகனத்துடனே முகாம் நடைபெறும் இடத்துக்கு அழைத்துச் சென்று உடனுக்குடன் சோதனை முடிவை உறுதிசெய்து, பாதிப்பு இருப்பதாக கருதும் நபர்களிடம் அப்போதே சளி மாதிரியை பெற திட்டமிட்டுள் ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x