திருவையாறில் தியாகராஜர் ஆராதனை: காவிரிக்கரையில் இசை வெள்ளம்!

திருவையாறில் தியாகராஜர் ஆராதனை: 
 காவிரிக்கரையில் இசை வெள்ளம்!
Updated on
1 min read

திருவையாறு காவிரிக் கரையில் உள்ள சத்குரு தியாகராஜர் சமாதி வளாகத்தில் நூற்றுக்கணக்கான இசைக் கலைஞர்கள் பஞ்சரத்ன கீர்த்தனைகளை சேர்ந்திசைத்து இசை அஞ்சலி செலுத்தினர். இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில் வாழ்ந்த கர்னாடக சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான சத்குரு தியாகராஜரின் சமாதி வளாகத்தில், அவர் மறைந்த புஷ்ய பகுள பஞ்சமி திதியன்று ஆண்டுதோறும் இசை ஆராதனை விழா நடைபெறுகிறது. அதன்படி, 171-ம் ஆண்டு ஆராதனை விழாவை கடந்த 2-ம் தேதி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தொடங்கிவைத்தார். தொடர்ந்து, நாள்தோறும் காலை 9 முதல் இரவு 11 மணி வரை இசைக் கலைஞர்கள் தியாகராஜருக்கு இசை அஞ்சலி செலுத்தினர்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தியாகராஜரின் பஞ்சரத்ன கீர்த்தனைகளை சேர்ந்திசைக்கும் ஆராதனை விழா நடைபெற்றது. காலை 7 மணியளவில் திருவையாறு திருமஞ்சன வீதியில் உள்ள தியாகராஜரின் நினைவு இல்லத்தில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, தியாகராஜர் சிலையுடன் உஞ்சவிருத்தி பஜனை ஊர்வலம் புறப்பட்டது. முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து, தியாகராஜர் சமாதியை காலை 8.30 மணியளவில் வந்தடைந்தது. அங்கு, அவரது உருவச் சிலைக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றன.

அதேநேரத்தில், மங்கள இசையும், தொடர்ந்து 9 மணிக்கு பிரபஞ்சம் எஸ்.பாலச்சந்திரன் தலைமையில் புல்லாங்குழல் இசைக் கலைஞர்களின் கீர்த்தனைகளுடன் தியாகராஜருக்கு இசை ஆராதனையும் தொடங்கியது. நூற்றுக்கணக்கான இசைக் கலைஞர்கள் நாட்டை, கெளளை, ஆரபி, வராளி, ஸ்ரீராகம் ஆகிய ராகங்களில் அமைந்த பஞ்சரத்ன கீர்த்தனைகளை சேர்ந்திசைத்து தியாகராஜருக்கு இசை அஞ்சலி செலுத்தினர். ஒரு மணி நேரம் சேர்ந்திசை மழையில் காவிரிக் கரையே நனைந்தது.

பாடகர்கள் சுதா ரகுநாதன், மகதி, பின்னி கிருஷ்ணகுமார், ரஞ்சனி - காயத்ரி, ஓ.எஸ்.அருண், சசிகிரண், சந்தீப் நாராயணன், பந்துல ரமா, மிருதுளா நாராயணன், நாதஸ்வரக் கலைஞர்கள் இஞ்சிக்குடி இ.பி. கணேசன், வடுவூர் கிருஷ்ணமூர்த்தி, சேக் மெகபூப் சுபானி, காலிஷாபீ மெகபூப், நெய்வேலி ஐயப்பன் சகோதரர்கள், திருப்பாம்புரம் டி.கே.எஸ். மீனாட்சிசுந்தரம், சின்னமனூர் கார்த்திக் - இளையராஜா, மிருதங்கக் கலைஞர்கள் உமையாள்புரம் சிவராமன், தஞ்சாவூர் முருகபூபதி உள்ளிட்ட நூற்றுக்கணக்கான இசைக் கலைஞர்கள் மற்றும் இசை ஆர்வலர்கள் பங்கேற்று கீர்த்தனைகளைப் பாடி, இசைத்தனர். தியாகபிரம்ம மகோற்சவ சபை தலைவர் ஜி. ரங்கசாமி மூப்பனார், செயலாளர்கள் அரித்துவாரமங்கலம் கே.பழனிவேலு, சிறீமுஷ்ணம் வி.ராஜாராவ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ஹரிகதை, உபன்யாசம்

பஞ்சரத்ன கீர்த்தனை நிறைவு பெற்றதும் நாதஸ்வர இசையும், விசாகா ஹரி குழுவினரின் ஹரிகதையும், தாமல் ராமகிருஷ்ணாவின் உபன்யாசமும் அடுத்தடுத்து நடைபெற்றன. தொடர்ந்து இசைக் கலைஞர்களின் அஞ்சலி நடைபெற்றது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in