Published : 25 Oct 2023 06:27 AM
Last Updated : 25 Oct 2023 06:27 AM

மேல்தாடை பிளவு, மூச்சு விடுவதில் கோளாறு உள்ளிட்ட பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட 4 மாத குழந்தைக்கு சிறப்பு சிகிச்சை: மறுவாழ்வு தந்த கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை

சென்னை: பிறந்ததில் இருந்தே பல்வேறு பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட 4 மாத குழந்தைக்கு கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து மறுவாழ்வு அளித்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்ட கோவில்பட்டியை சேர்ந்த கூலித் தொழிலாளி தம்பதியரின் 4 மாத பெண் குழந்தை டேவினா. பிறவிலேயே மேல் தாடை பிளவு, கீழ் தாடை வளர்ச்சியின்மை மற்றும் நாக்கு உள்ளே இருத்தல் (பியரின் ராபின் சின்ரோம்) பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்தார். மேலும் பிறந்ததில் இருந்தே மூச்சுவிடுவதில் சிரமம் இருந்துள்ளது.

பால் குடித்தாலும், அந்த பால் மூக்கின் வழியாக வெளியேறும் பிரச்சினை இருந்தது. குழந்தையை நேராக படுக்க வைத்தால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உடல் முழுவதும் நீல நிறமாக மாறிவிடும். இதனால், குழந்தையை 24 மணி நேரமும் தாயும், தந்தையும் மாறி மாறி தோள்மீது தூங்க வைத்து வந்துள்ளனர்.

குழந்தையை காப்பாற்ற திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பெற்றோர் சென்றனர். சென்னைக்கு செல்லும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியதால் சென்னைக்கு வந்தனர். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ரூ.4 லட்சம் வரை செலவாகும் என்று கூறியதால், எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு சென்றனர். அங்கிருந்த மருத்துவர்கள் பரிந்துரையின்படி கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் குழந்தையை சேர்த்தனர்.

மருத்துவமனை இயக்குநர் பார்த்தசாரதி அறிவுறுத்தலின்படி, முகச்சீரமைப்பு நிபுணர் எஸ்.பி.சேதுராஜன், மயக்கவியல் மருத்துவர்கள் கார்த்திகேயன், அருள்ராஜ், சண்முகபிரியா ஆகியோர் கொண்டகுழுவினர் `நாக்கு உதடு ஒட்டுதல்’அறுவை சிகிச்சை செய்தனர்.

இந்த சுமார் 2 மணி நேர சிகிச்சையின் மூலம் உள்ளே இருந்த நாக்கு வெளியே கொண்டு வரப்பட்டது. அதேபோல், வளர்ச்சியின்மையால் பின்னால் இருந்த கீழ் தாடையும் முன்னுக்கு கொண்டுவரப்பட்டது. மேல் தாடை பிளவு பிரச்சினைக்கு குழந்தையின் ஒரு வயதில் சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் முடிவுசெய்துள்ளனர்.

இது தொடர்பாக மருத்துவமனை இயக்குநர் பார்த்தசாரதி, முகச்சீரமைப்பு நிபுணர் எஸ்.பி.சேதுராஜன் கூறும்போது, “அறுவை சிகிச்சைக்கு பின்னர் குழந்தை நலமுடன் உள்ளது. குழந்தை நன்றாக பால் குடிக்கிறது. எவ்வித சிரமமும் இன்றி குழந்தை தூங்குகிறது. தொட்டிலில் குழந்தையை பெற்றோர் தூங்க வைக்கின்றனர்.

பிறந்ததில் இருந்தே சரியாக பால் குடிக்க முடியாததால் 8 கிலோ இருக்க வேண்டிய குழந்தை 4 கிலோதான் உள்ளது. அதனால், குழந்தையின் எடை அதிகரித்ததும், ஒருவயதில் குழந்தைக்கு மேல் தாடை பிளவுக்கு சிகிச்சை அளிக்கப்படும். தனியார் மருத்துவமனையில் ரூ.4லட்சம் வரை செலவாகும் இந்தஅறுவை சிகிச்சை இந்த மருத்துவமனையில் இலவசமாக செய்யப்பட்டுள்ளது” என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x