

சென்னை: போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் சுற்றித் திரியும் மாடுகளைப் பிடிக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்களுடன் சென்னை போலீஸார் கைகோத்துள்ளனர்.
சென்னை அரும்பாக்கம் பகுதியில் கடந்த ஆகஸ்டு மாதம் பள்ளி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த ஆயிஷா என்ற சிறுமியை தெருவில் சுற்றிய மாடுமுட்டி தள்ளியது. இதில் அந்தசிறுமி காயங்களுடன் தப்பினார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்துதெருவில் சுற்றித் திரியும் மாடுகளைப் பிடிக்கும் நடவடிக்கையில் மாநகராட்சி தீவிரம் காட்டியது.
எனினும் தெருக்களில் மாடுகளின் நடமாட்டத்தை முற்றிலுமாக கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த சூழலில் கடந்த 18-ந்தேதி திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் தெருவில் நடந்து சென்ற சுந்தரம் என்ற 80 வயது முதியவரை மாடு முட்டித் தள்ளியது. இதில் அவர் படுகாயமடைந்தார்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் உத்தரவின் பேரில் மாநகராட்சி ஊழியர்கள் தெருக்களில் சுற்றித் திரியும் மாடுகளைப் பிடிக்கும் பணியில் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றனர்.
சட்டரீதியான நடவடிக்கை: இவ்வாறு பிடிக்கப்படும் மாடுகள் மாநகராட்சி கால்நடை காப்பகத்துக்கு அழைத்துச் செல்லப்படுகின்றன. மாட்டின் உரிமையாளர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. மேலும், மாட்டின் உரிமையாளர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுப்பதற்காக மாநகராட்சி சார்பில் காவல் துறையிலும் புகார் அளிக்கப்பட்டு வருகிறது.
நேரடி நடவடிக்கை: இந்நிலையில் சாலை, தெருக்களில் போக்குவரத்துக்கு இடையூறாகவும், பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாகவும் சுற்றித்திரியும் மாடுகளைப் பிடிக்கும் பணியில் மாநகராட்சியுடன் சென்னை காவல்துறையும் கைகோத்துள்ளது. பிடிக்கப்படும் மாட்டின் உரிமையாளர்மீது போலீஸாரே நேரடியாக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளனர்.