Published : 25 Oct 2023 05:52 AM
Last Updated : 25 Oct 2023 05:52 AM
சென்னை: மருது சகோதரர்களின் நினைவு நாளையொட்டி, அவர்களை என்றும் தேசம் நினைவுகூர்கிறது எனதமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம் சூட்டியுள்ளார். பல அரசியல் தலைவர்களும் மருது சகோதரர்களின் படத்துக்கு மரியாதை செய்துள்ளனர்.
சுதந்திரப் போராட்ட வீரர்களானமருது பாண்டியர்களின் 224-வதுநினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, சென்னைகாந்தி மண்டப வளாகத்தில் அவர்களது திருவுருவ சிலையை அலங்கரித்து, அதன் அருகே அவர்களதுதிருவுருவ படமும் மாலை அணிவிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது.
தமிழக அரசின் சார்பில் அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், மா.சுப்பிரமணியன், மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், தமிழச்சி தங்கபாண்டியன் எம்பி, ஏ.எம்.வி.பிரபாகரராஜா எம்எல்ஏ உள்ளிட்டோர் மருதுபாண்டியர்களின் படத்துக்கு மலர்தூவி மரியாதை செய்தனர்.
தொடர்ந்து தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சு.திருநாவுக்கரசர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். இவருடன் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் டி. துரை, தமிழ்ச்செல்வன், க.வீரபாண்டி, கராத்தே ரவி, மிதுன் சக்கரவர்த்தி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
இதற்கிடையே அரசியல் தலைவர்கள் புகழாரம் சூட்டி அறிக்கைவெளியிட்டுள்ளனர். அதில் கூறியிருப்பதாவது:
ஆளுநர் ஆர்.என்.ரவி: வீரமிக்க சுதந்திர போராட்ட வீரர்களானமருது சகோதரர்களின் தியாக தினமான இன்று தேசம் நன்றியுடன் நினைவு கூர்கிறது. இந்திய சுதந்திரத்துக்கான முதல் ஆவணப்படுத்தப்பட்ட அழைப்பான அவர்களது ‘ஜம்புதீவு பிரகடனம்’ மக்கள் ஒன்றுபடவும், காலனித்துவ ஆட்சிக்கு எதிராக போராடிடவும் தூண்டியது.
தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்: நம் பாரத மண்ணின் உரிமைக்காகவும், சுதந்திரத்துக்காகவும் போராடிய மாவீரர்கள் மருது பாண்டியர் எனப்படும் மருது சகோதரர்களின் நினைவு தினத்தில், அவர்தம் வீரத்தையும், தியாகத்தையும் போற்றுகிறேன்.
தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை: ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் இருந்து போர்க்குரல் எழுப்பிய மாவீரர்கள் மருது சகோதரர்கள். ராணி வேலு நாச்சியாரை மீண்டும் அரியணையில் அமர வைத்தபெருமைக்குரியவர்கள். தங்கள் உயிரையும் துச்சமென மதித்துத்தியாகம் செய்து, தேச விடுதலைக்காக போராடிய மாவீரர்கள் மருதுசகோதரர்கள் வீரத்தையும், புகழையும் போற்றி வணங்குவோம்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: சுதந்திர இந்தியாவை உருவாக்க ஆங்கிலேய ஆதிக்கத்துக்கு எதிராக மக்கள் புரட்சியை ஒன்றிணைத்து, முதல் போர் பிரகடனம் அறிவித்த மருது சகோதரர்களின் நினைவுநாள். அவர்களது வீரத்தையும், தியாகத்தையும் இந்நாளில் போற்றி வணங்குவோம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT