Published : 25 Oct 2023 06:00 AM
Last Updated : 25 Oct 2023 06:00 AM

விடுதலை சிறுத்தைகள் கட்சி முதன்மை செயலர் உஞ்சை அரசன் காலமானார்

சென்னை

விசிக முதன்மைச் செயலர் உஞ்சைஅரசன் (67) நேற்று காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உஞ்சை விடுதியைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர் துரை ராஜன். முற்போக்கு சிந்தனை கொண்ட இவர், தொடக்கத்தில் கம்யூனிஸ்ட் இயக்கங்களில் செயல்பட்டு வந்தார். பின்னர், தலித் விடுதலை பண்பாட்டு இயக்கத்தை நிறுவி பட்டியலினத்தவர்களின் உரிமைகளுக்கான போராடினார்.

1990 காலகட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைந்தார். கடந்த 2002-ம் ஆண்டு அனைவரும் தமிழ்ப் பெயரை சூட்டிக் கொள்ள வேண்டும் என கட்சித் தலைவர் திருமாவளவன் அறிவுறுத்தலின்பேரில், தனது பெயரை உஞ்சை அரசன் என மாற்றிக் கொண்டார். இதற்கிடையே முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் என்பதால் தனது வேலையை ராஜினாமா செய்தார். சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக கட்சியின் பல்வேறு பொறுப்புகளை வகித்த அவர், இறுதியாக முதன்மைச் செயலாளராக உயர்ந்தார்.

அண்மையில் கட்சிப் பணிக்காக கள்ளக்குறிச்சி சென்றிருந்தபோது, அக்.2-ம் தேதி மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், இதயம் செயலிழந்த நிலையில் நேற்று காலை உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல், பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை, அசோக் நகரில் உள்ள கட்சித் தலைமையகத்தில் வைக்கப்பட்டிருந்தது.

அங்கு விசிக தலைவர் திருமாவளவன் கட்சிக் கொடியை போர்த்தி அவருக்கு அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து, எம்எல்ஏக்கள் எஸ்.எஸ்.பாலாஜி, பனையூர் பாபு, கட்சியின் துணை பொதுச்செயலாளர்கள் வன்னியரசு, எழில் கரோலின், தலைமை நிலையச் செயலாளர்கள் பாலசிங்கம், தகடூர் தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட விசிக நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.

இதையடுத்து, அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு இன்று மாலை நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. அவருக்கு பரமேஸ்வரி என்ற மனைவியும் 3 மகள்களும் உள்ளனர். உஞ்சை அரசன் மறைவையொட்டி, விசிக கொடிகள் ஒரு வார காலத்துக்கு அரைக்கம்பத்தில் பறக்கவிட வேண்டுமென கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளது.

உஞ்சை அரசன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்ட அறிக்கையில், "மதவாத சக்திகளையும், சனாதன மூடப்பழக்க வழக்கங்களையும் எதிர்த்து போராடிய களப்பணியாளர் உஞ்சை அரசன். அவரது மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவரது மறைவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x