Published : 25 Oct 2023 04:12 AM
Last Updated : 25 Oct 2023 04:12 AM
பெரியகுளம்: சோத்துப்பாறை அணை நீர்மட்டம் முழுக் கொள்ளளவை எட்டியதால், மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம், பெரியகுளத்தி லிருந்து 9 கி.மீ. தொலைவில் மேற்குத் தொடர்ச்சி மலை அருகே சோத்துப்பாறை அணை அமைந்துள்ளது. இந்த அணை, பெரியகுளம், தென்கரை உள்ளிட்ட பகுதிகளின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது. இதன் மூலம் 2,865 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
தென் மேற்குப் பருவமழை போதிய அளவு பெய்யாததால், அணைக்கான நீர்வரத்து குறைந்த அளவிலேயே இருந்து வந்தது. இந்நிலையில், கடந்த 10 நாட்களாக பெய்து வரும் தொடர் மழையினால் நீர்வரத்து வெகுவாக அதிகரித்தது. இதனால், 2 வாரங்களுக்கு முன்பு 109 அடியாக இருந்த நீர்மட்டம் (மொத்த உயரம் 126.28 அடி) மெல்ல உயரத் தொடங்கியது.
கடந்த வாரம் 121 அடியாக உயர்ந்ததால், முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும், பின்னர் 124 அடியாக உயர்ந்ததால் இரண்டாம் கட்ட எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. தற்போது, நீர்மட்டம் முழுக்கொள்ள ளவான 126.28 அடியை எட்டியது. இதனைத் தொடர்ந்து, மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப் பட்டது.
தற்போது, அணைக்கு வரும் 8 கன அடி உபரி நீர் நிரம்பி வெளியேறி வருகிறது. உபரிநீரின் அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளதால், பெரியகுளம், வடுகபட்டி, மேல் மங்கலம், ஜெயமங்கலம், குள்ளப்புரம் உள்ளிட்ட பகுதி கரையோர மக்கள் வராக நதியில் இறங்க வேண்டாம் என்று, நீர்வளத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT