Published : 01 Jul 2014 10:00 AM
Last Updated : 01 Jul 2014 10:00 AM

அலைச்சறுக்கு விளையாட்டு பிரியர்களை கவர்ந்திழுக்கும் ராமேசுவரம் தீவு: மீனவ இளைஞர்கள் வாழ்வும் உயரும்

கோவா, அந்தமான், நிக்கோபார் தீவுகளைத் தொடர்ந்து அலைச்சறுக்கு விளையாட்டுப் பிரியர்களின் கவனம் தற்போது ராமேசுவரம் தீவை ஈர்த்துள்ளது.

ஹவாய் தீவு பழங்குடி இனத்து மக்களின் பாரம்பரிய விளையாட்டான அலைச்சறுக்கு போட்டி இன்று உலக அளவில் பிரமிக்கத்தக்க ஒரு சாகச விளையாட்டாக மாறியுள்ளது. ஆனால் மூன்று புறமும் கடல் பகுதிகளைக் கொண்டுள்ள தீபகற்ப தேசமான இந்தியாவில் ஏனோ அலைச்சறுக்கு விளையாட்டு அவ்வளவாக பிரபலமாகவில்லை.

தமிழகத்தைப் பொருத்த அளவில் சென்னை கோவளத்தில் அலைச்சறுக்கு விளையாட்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளாலும், உள்ளுர் மீனவ இளைஞர்களாலும் ஆர்வமாக விளையாடப்படுகிறது. அதேபோல் தமிழகத்தில் ராமேசுவரம், தூத்துக்குடி, திருச்செந்தூர், கன்னியாகுமரி ஆகிய கடற்பகுதிகள் அலைச்சறுக்கு விளையாட்டுக்கு ஏற்ற இடங்களாகவும் கண்டறியப்பட்டுள்ளன.

அலைகள் எழும் பகுதி

ராமேசுவரம் தீவில் உள்ள மன்னார் வளைகுடா தெற்கு கடல் பிராந்தியமும், பாக் ஜலசந்தி வடக்கு கடல் பிராந்தியமும் அலைச்சறுக்கு விளையாட நன்கு அலைகள் எழுந்து வரக்கூடியப் பகுதிகளாக திகழ்கின்றன.

கடந்த ஆறு மாத காலமாக பிரபல தனியார் குளிர்பான நிறுவனம் தனுஷ்கோடி, ராமேசுவரம் மற்றும் பாம்பன் குந்துகால் கடல்களில் அலைச்சறுக்கு விளையாட்டை பரிசோதனை செய்து பார்த்தது. அலைச்சறுக்கு விளையாட்டுப் பரிசோதனையில் ராமேசுவரம் தீவின் கடல் அலைகள் அந்த தனியார் நிறுவனத்தைக் கவர்ந்திடவே, விரைவில் அலைச்சறுக்கு சார்ந்த போட்டிகளை ராமேசுவரம் கடற்பகுதியில் நடத்த ஆயத்தமாக உள்ளது.

மாற்றுத்தொழில் இல்லை

தமிழகத்தில் பாரம்பரியமான விளையாட்டுகள் பல உள்ளள. ஆனால் நெய்தல் நிலமான கடலோரப் பகுதி மக்களுக்கென பாரம்பரியமான விளையாட்டு என்று எதுவும் இல்லை. தற்போது இலங்கை கடற்படையினரால் ராமேசுவரம் மீனவர் தொழில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு மாற்றுத் தொழில் தெரியாமல் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் அலைச்சறுக்கு விளையாட்டை பிரபல தனியார் நிறுவனம் நடத்த ஆர்வம் காட்டிவருவது ராமேசுவரம் சுற்றுலா வளர்ச்சிக்கும், உள்ளூர் மக்களின் பொருளாதார வளர்ச்சிக்கும் பெருந்துணையாக அமையும். மீனவ இளைஞர்களை அலைச்சறுக்கு விளையாட்டு பக்கம் திசை திருப்பி அவர்களுக்குப் பயிற்சி அளித்தால் விளிம்பு நிலையில் வாழும் மீனவர்களின் வாழ்வும் உயரும் என்கின்றனர் உள்ளூர் மக்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x