Published : 25 Oct 2023 06:04 AM
Last Updated : 25 Oct 2023 06:04 AM
சென்னை: கிரிக்கெட் போட்டி பாதுகாப்புப் பணியின்போது தேசியக் கொடியை அவமதித்ததாகக் காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான ஆட்டம் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
இதே மைதானத்தில் கடந்த 13-ம் தேதி அன்று நியூசிலாந்து-வங்கதேச அணிகள் இடையிலான போட்டியின்போது, வங்கதேச ரசிகர்கள் 2 பேர் பாலஸ்தீனத்துக்கு ஆதரவான வாசகங்களுடன் பதாகைகளை ஏந்தி நின்றது சர்ச்சைக்குள்ளானது.
இதனால், பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான ஆட்டத்தைப் பார்க்க வந்த ரசிகர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. இந்த போட்டியைப் பார்ப்பதற்காக மைதானம் வெளியே வரிசையில் காத்திருந்த ரசிகர்கள் சிலர் இந்திய தேசியக் கொடியைக் கையில் வைத்திருந்தனர்.
அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த செம்பியம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் நாகராஜன் தேசியக் கொடியைப் பறித்து குப்பைத் தொட்டியில் வீச முயன்றார். இதை ரசிகர் ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரவவிட்டார். இந்த வீடியோ காட்சி வைரலானது.
தேசியக் கொடியை அவமதித்த உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் வலியுறுத்தினர். இந்த சம்பவம் பற்றி சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் விசாரணை நடத்தினார். இதைத் தொடர்ந்து அவர், உதவி ஆய்வாளர் நாகராஜனை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்தார்.
அதிகாரிகள் விளக்கம்: இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் உயர் அதிகாரிகள் கூறும்போது, ``இஸ்ரேல்-பாலஸ்தீனம் போர், மணிப்பூர் கலவரம் ஆகிய சம்பவங்கள் தொடர்பாக ரசிகர்கள் யாரேனும் சர்ச்சைக்குரிய வகையில் பதாகைகள், கொடிகளை எடுத்துச் சென்றால் அதைக் கைப்பற்ற வேண்டும் என்று கிரிக்கெட் மைதானத்துக்கு வெளியே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த உத்தரவை தவறாக புரிந்துகொண்டு உதவி ஆய்வாளர் நாகராஜன் செயல்பட்டிருப்பது தெரியவந்தது'' என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT