கோவை | கிடாரி கன்றுகளை ஈன வடிவமைக்கப்பட்ட சினை ஊசி: கால்நடை வளர்ப்பில் புதிய புரட்சி

கோவை | கிடாரி கன்றுகளை ஈன வடிவமைக்கப்பட்ட சினை ஊசி: கால்நடை வளர்ப்பில் புதிய புரட்சி
Updated on
2 min read

கோவை: பாலுக்கும், பால் பொருட்களுக்குமான தேவை அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப, பசுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், கால்நடை வளர்ப்போரின் வருவாயை பெருக்கவும் கிடாரி (பெண்) கன்றை பசுக்கள் ஈனும் வகையில், பாலின பிரிப்பு உறைவிந்து ஊசி (சினை ஊசி) கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஊசியானது, தமிழக கால்நடை பராமரிப்புத்துறை மூலம் மானிய விலையில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் வழங்கப்பட்டு வருகிறது.

கோவை, ஈரோடு, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களுக்கு முதல்கட்டமாக இந்த ஊசியானது வழங்கப்பட்டு, அதை எப்படிகையாள வேண்டும் என கால்நடை மருத்துவர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில்மட்டும் இதுவரை சுமார் 250 ஊசிகள் தகுதியான கிடாரிகளுக்கு செலுத்தப்பட்டுள்ளன.

இந்த திட்டத்தின் பயன்கள், செயல்படுத்தும் முறை குறித்து கால்நடை பராமரிப்புத்துறை கோவை மண்டல இணை இயக்குநர் டாக்டர் ஆர்.பெருமாள்சாமி கூறியதாவது: உழவுப் பணிக்காகவும், வேளாண் விளைபொருட்களை எடுத்துச்செல்லவும், காளை மாடுகளை பயன்படுத்தும் நிலை மாறியபிறகு, காளை கன்றுகளுக்கான தேவை குறைந்துவிட்டது. காளை கன்றுகளை வளர்ப்பதில் ஒருசிலரே ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால், கிடாரி கன்றை வளர்ப்பதன் மூலமும், அவற்றை விற்பனை செய்வதன் மூலமும் வளர்ப்போருக்கு வருவாய் கிடைக்கிறது.

சாதாரண சினை ஊசியில், கிடாரி அல்லது காளை கன்று பிறக்க 50:50 என்ற விகிதத்தில் சாத்தியக்கூறு இருக்கிறது என்றால், பாலின பிரிப்பு உறைவிந்து ஊசியில் 85 சதவீதம் கிடாரி கன்றுக்கே வாய்ப்பு உள்ளது. இவ்வாறு கிடாரி கன்று பிறப்பதன் மூலம் கால்நடை வளர்ப்பில் பலருக்கும் ஆர்வம் ஏற்படும்.

உதகையில் மட்டுமே உற்பத்தி: நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள மாவட்ட கால்நடை பண்ணையில், இந்த ஊசியை தயாரிக்க ரூ.47 கோடியில் ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இந்த ஓரிடத்தில் மட்டும்தான் உற்பத்தி உள்ளது. இந்த ஊசியை தயாரிக்க உற்பத்தி செலவு ரூ.637 ஆகும்.

ஆனால், தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு ரூ.160 என்ற விலையில் ஊசி வழங்கப்படுகிறது. இதுதொடர்பாக கால்நடை வளர்ப்போர், விவசாயிகள் மத்தியில் தற்போது விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

கோவை மாவட்டத்தில் 3 ஆயிரம் ஜெர்சி பசுக்கள், 5 ஆயிரம் ஜெர்சி கலப்பின பசுக்கள், 750 Holstein Friesian வகை பசுக்கள் (கருப்பு, வெள்ளை நிறத்தில் உருவத்தில் பெரிதாக இருக்கும் பசு), அதன் கலப்பின பசுக்கள் 1,000 என மொத்தம் 9,750 பசுக்களுக்கு 2024 செப்டம்பர் முடிய இந்த ஊசியை செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேவையை பொறுத்து இந்த எண்ணிக்கை அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது.

200 கிலோ எடை அவசியம்: ஒவ்வொரு கிராமத்துக்கும் பொறுப்பான கால்நடை மருத்துவர் தகுதியான கால்நடைகளுக்கு ஊசி செலுத்தும் வகையில், கால்நடைகளை நல்ல நிலையில் பராமரிக்கும் விவசாயிகளை தேர்வு செய்வார். நவீன வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்தும் விவசாயிகள், தாங்களாக முன்வந்து இந்த ஊசியை செலுத்த ஒப்புதல் வழங்கும் விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

நோய் தொற்று இல்லாத, ஆரோக்கிய மான, 200 கிலோ எடைக்கும் அதிகமான கிடாரிகள் இந்த ஊசி செலுத்த தேர்வு செய்யப்படும். இவ்வாறு ஊசி செலுத்தப்படும் கிடாரிகளுக்கு 12 இலக்க தனித்துவ எண் கொண்ட 'டேக்' காதில் பொருத்தப்படும். கரு உருவானது முதல் கன்று பிறக்கும் வரையிலான தகவல்கள் bharatpashudhan என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். பிறந்த பிறகும், அந்த கன்று தொடர்ந்து கண்காணிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in