Published : 23 Oct 2023 11:58 AM
Last Updated : 23 Oct 2023 11:58 AM
சென்னை: பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில் உயரம் தாண்டுதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில், "உயரம் தாண்டுதல் T63 பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று தமிழ்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் மீண்டுமொருமுறை பெருமை தேடித்தந்துள்ள நமது தங்கவேலுவுக்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுகள்! உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்!" என்று பதிவிட்டுப் பாராட்டியுள்ளார்.
இது தொடர்பாக ராமதாஸ் தனது சமூகவலைதளப் பக்கத்தில், "சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வரும் பாரா ஆசிய விளையாட்டு போட்டிகளின் உயரம் தாண்டும் ஆட்டத்தில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு இரண்டாம் இடத்தைப் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இதற்காக அவருக்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்வதுடன், இனிவரும் ஆட்டங்களில் மேலும் சாதிக்கவும் வாழ்த்துகிறேன்.
இதே உயரம் தாண்டும் போட்டிகளில் தங்கம் வென்ற இந்திய வீரர் சைலேஷ் குமார், வெண்கலம் வென்ற இந்திய வீரர் இராம்சிங் ஆகியோருக்கும் எனது வாழ்த்துகளையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "சீனாவில் நடைபெற்று வரும் பாரா ஆசிய விளையாட்டு போட்டிகளில் F51 கிளப் எறிதல் மற்றும் ஆடவர்களுக்கான உயரம் தாண்டுதலில் மூன்று பதக்கங்களையும் வென்ற இந்திய அணி வீரர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆடவர் உயரம் தாண்டுதலில் சைலேஷ்குமார் தங்கமும், தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு வெள்ளியும், ராம் சிங் வெண்கலமும் வென்று அசத்தியுள்ளனர். அதே போல F51 கிளப் எறிதலில் பிரணவ் சூர்மா தங்கமும், தராம்பீர் வெள்ளியும், அமித்குமார் சரோஹா வெண்கலமும் வென்றுள்ளனர்.
கடின உழைப்பு மற்றும் விடா முயற்சியால் சாதனை படைத்திருக்கும் இந்திய வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து நடைபெறும் போட்டிகளிலும் பதக்கங்களை குவித்து தாய்நாட்டிற்கு மென்மேலும் பெருமை சேர்க்க வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT