தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்கிழக்கு மற்றும் அதையொட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, ஒடிசா மாநிலம் பாராதீப் நகருக்கு தெற்கே சுமார் 590 கி.மீ. தொலைவிலும், மேற்கு வங்க மாநிலம் டிகா நகரத்துக்கு தெற்கே சுமார் 740 கி.மீ. தொலைவிலும் நிலவுகிறது.

இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, வங்கதேசம் மற்றும் அதையொட்டியுள்ள மேற்கு வங்ககடலோரப் பகுதிகளை நோக்கி அடுத்த 3 தினங்களில் நகரக் கூடும்.

அரபிக் கடல் பகுதிகளில் நிலவிய ‘தேஜ்’ புயல் அதிதீவிர புயலாக வலுப்பெற்று மத்திய மேற்கு மற்றும் அதையொட்டிய தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவுகிறது. இது நாளை (அக். 24) ஏமன் மற்றும் ஓமன் கடற்கரையை கடக்கக்கூடும். அந்த சமயத்தில் காற்று அதிகபட்சமாக 140 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.

வரும் 26-ம் தேதி வரை தென்தமிழகத்தில் சில இடங்களிலும், வடதமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 27, 28-ம் தேதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 93 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 77 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டியிருக்கும்.

அக். 22-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக சென்னை அயனாவரம், மதுரை மேலூர் ஆகிய இடங்களில் தலா 5 செ.மீ., சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் 4 செ.மீ., மதுரை மாவட்டம் தல்லாகுளம், மதுரை நகரம், மதுரை வடக்கு, இடையப்பட்டி, தானியமங்கலம், கள்ளிக்குடி ஆகிய இடங்களில் 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

மீனவர்கள் அரபிக்கடல் பகுதிகளுக்கு வரும் 25-ம் தேதி வரையும், வங்கக் கடல் பகுதிகளுக்கு வரும் 26-ம் தேதி வரையும் செல்ல வேண்டாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in