Published : 23 Oct 2023 05:24 AM
Last Updated : 23 Oct 2023 05:24 AM

உதயநிதியை அமைச்சராக்கியதுதான் திமுக அரசின் சாதனை: பழனிசாமி விமர்சனம்

சேலம்: இரண்டரை ஆண்டுகளில் உதயநிதியை அமைச்சராக்கியது தான் திமுக அரசின் சாதனை என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி பேசினார்.

பல்வேறு கட்சிகளில் இருந்து விலகிய இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி சேலம் சீலநாயக்கன்பட்டியில் நேற்று நடந்தது. அதிமுகவில் இணைந்தவர்களை வரவேற்று பொதுச்செயலாளர் பழனிசாமி பேசியது:

சிறுபான்மை மக்களுக்கு எதிராக அதிமுக இருப்பது போன்று வேண்டுமென்றே திட்டமிட்டு மாய தோற்றத்தை கடந்த காலத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் உருவாக்கினர். அதிமுக ஆட்சி காலத்தில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக பேணிகாக்கப்பட்டது. பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது பல்வேறு மாநிலங்களில் வன்முறை நிகழ்ந்தது. ஆனால், அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா சிறுபான்மை மக்களுக்கு முழு பாதுகாப்பு வழங்கி சிறிய பிரச்சினை கூட இல்லாமல் பார்த்துக் கொண்டார்.

கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் அவ்வப்போது அமைக்கப்படுகிறது. கொள்கை என்பது நிலையானது. அதிமுக நிலையான கொள்கையை கொண்டது. அதிமுக-வுக்கு சாதி, மதம் வேறுபாடு கிடையாது. அவரவர் மதம் அவர்களுக்கு புனிதமானது. அதில் யாரும் தலையிட முடியாது.

பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகிய பின்னரே திமுக தலைவர் ஸ்டாலினுக்கு இஸ்லாமியர்களின் ஞாபகமே வருகிறது. நான் சாதி, மதத்துக்கு அப்பாற்பட்டவன். எந்த சாதிக்கும், மதத்துக்கும் அதிமுக-வுக்கு விரோதம் கிடையாது. இதனால் முதல்வர் ஸ்டாலினுக்கு பயம் வந்து விட்டது. சிறுபான்மை மக்கள் அதிமுக-வுடன் சேர்ந்து விடுவார்கள் என்ற அச்சம் வந்து விட்டது.

உண்மையிலேயே அவர்களுக்கு நன்மைகள் செய்திருந்தால் உங்களை நேசித்திருப்பார்கள். ஆனால், நீங்கள் எந்த நன்மையும் செய்யவில்லை. ஒரு துரும்பை கூட கிள்ளிப் போடவில்லை. முதல்வர் ஸ்டாலினும், அவரது மகன் உதயநிதியும் பாஜக-வின் ‘பி’ டீம் அதிமுக என கூறுகிறார்கள். அதிமுக எப்போதும் ஒரிஜினல் ஏ டீம் தான். எங்களுக்கு துணிச்சல் இருக்கிறது. உங்களிடம் இல்லை.

திமுக அரசின் இரண்டரை ஆண்டு ஆட்சி காலத்தில் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. மேட்டூர் அணையை நம்பி உள்ள 24 மாவட்டங்களில் உள்ள மக்களை பாதுகாக்காமல், தன் பதவியை மட்டுமே திமுக அரசு பாதுகாக்கிறது. அரிசி விலை கிலோவுக்கு ரூ.10 உயர்ந்து விட்டது. கூட்டணிக்கு முக்கியத்துவம் வழங்கும் முதல்வர் தண்ணீர் பெற முக்கியத்துவம் வழங்கவில்லை.

திமுக ஆட்சியில் போதைப் பொருள் நிறைந்த மாநிலமாக தமிழகம் காட்சியளிக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்தபின்னர் புதிதாக ஒரு திட்டத்தையும் கொண்டுவரவில்லை. நீட் தேர்வுக்கு எதிராக அனைவரிடமும் கையெழுத்து வாங்கினால் நீட் தேர்வு ரத்தாகி விடுமா, மக்களவைத் தேர்தலில் மக்களை சந்திக்கும்போது நீட் தேர்வு ரத்து குறித்து மக்கள் கேள்வி எழுப்புவார்கள் என்பதற்காகவே கையெழுத்து இயக்கத்தை தொடங்கி ஏமாற்றுகிறார்கள். ஆனால், மக்கள் ஏமாற மாட்டார்கள். இரண்டரை ஆண்டுகளில் உதயநிதியை அமைச்சராக்கியது தான் திமுக அரசின் சாதனை. இவ்வாறு பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x