

கோவை: தமிழ்நாட்டில் காற்றாலை மூலம் 9,000 மெகாவாட் மற்றும்சூரியஒளி மூலம் 4,500 மெகாவாட்மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான கட்டமைப்புகள் உள்ளன. மாநிலத்தின் தினசரி மின் தேவை 16 ஆயிரம் மெகாவாட் முதல் 18 ஆயிரம் மெகாவாட்டாகும்.
சூரியஒளி மின் உற்பத்தி குறித்து தமிழ்நாடு சூரியஒளிஆற்றல் மின்உற்பத்தியாளர்கள் சங்கப் (டான்ஸ்பா) பொருளாளர் சாஸ்தா எம்.ராஜா‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறியதாவது: தமிழகத்தில் ஆண்டு முழுவதும் சூரியஒளி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும்.
எனவே, சூரியஒளி மின்சாரத்தை அதிக அளவில் உற்பத்தி செய்யவும், இது தொடர்பான திட்டங்களை மக்களிடம் கொண்டுசெல்லவும் தமிழக அரசு உதவ வேண்டும்.
தமிழகத்தில் 2 கோடி மின் இணைப்புகளுக்கு (வீடு, தொழில்நிறுவனம் உள்ளிட்ட அனைத்து பிரிவும்) சேமிப்பு வசதியுடன் கூடிய, தலா 2 கே.வி. திறன்கொண்ட மேற்கூரை சூரியஒளி மின்உற்பத்தி கட்டமைப்பு அமைக்க அரசு உதவ வேண்டும். இதற்கு வீட்டுக்கு தலா ரூ.2 லட்சம் செலவாகும்.
ஒரு மின் இணைப்பு மூலம் தினமும் தலா 10 யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யலாம். இதனால் 20 கோடி யூனிட் மின்சாரத்தை (2 ஆயிரம் மெகாவாட்) தினமும் உற்பத்தி செய்ய முடியும். சேமிப்பு வசதி இருந்தால், மின்வாரியம் சூரியஒளி மின்சாரத்தைப் பெற்றுக்கொண்டு, தினமும் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையும், காலை 6 மணி முதல் 9 மணி வரையும் (உச்ச பயன்பாட்டு நேரங்களில்) மின் விநியோகம் செய்ய உதவும்.
இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக மின் இணைப்பு வைத்துள்ளவர்கள் ஒவ்வொருவருக்கும் ஆண்டுதோறும் 3,650 யூனிட்மின்சாரம் கழித்துக்கொள்ளலாம்.
அரசே நேரடியாகவோ அல்லது தனியார் பங்களிப்புடனோ இந்த திட்டத்தை செயல்படுத்தலாம். அதிகரித்து வரும் மின்தேவையைப் பூர்த்தி செய்ய இதுபோன்ற திட்டங்களைச் செயல்படுத்துவது மிகவும் அவசியமாகும். இவ்வாறு அவர் கூறினார்.