Published : 23 Oct 2023 06:10 AM
Last Updated : 23 Oct 2023 06:10 AM
உதகை: ஆயுத பூஜையை யொட்டி உதகையில் மல்லிகை பூ கிலோ ரூ.2000-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த ஆண்டு, ஆயுத பூஜை இன்று (அக்.23) கொண்டாடப்படுகிறது. இதில் தொழில் நிறுவனங்களிலும், வீடுகளிலும் பொதுமக்கள் பூஜை செய்வார்கள். ஆயுத பூஜையின்போது பூக்கள், பழங்கள், வாழை கன்றுகள், பொரி, சுண்டல் உள்ளிட்ட பொருட்களை வைத்து வழிபாடு செய்வர்.
இதனால் பூஜை பொருட்கள் மற்றும் பூக்கள், பழங்கள் வாங்க உதகை மார்க்கெட் மற்றும் சாலைகளில் நேற்று முன்தினமும், நேற்றும் பொதுமக்கள் மற்றும் சிறு வியாபாரிகளின் கூட்டம் அதிகமாக இருந்தது. அப்பர் பஜார், லோயர் பஜார், மெயின் பஜார் உள்ளிட்ட இடங்களிலும் பொதுமக்கள் அதிகளவில் திரண்டனர்.
இந்நிலையில், நேற்று காலை முதலே மார்க்கெட் சாலை உள்ளிட்ட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் நீண்ட தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் மக்கள் அவதிக்குள்ளாகினர். வாகனங்களை முறைப்படுத்தி, போக்குவரத்து நெரிசலை போலீஸார் சரி செய்தனர்.
கடந்த வாரம் ரூ.1000-க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ மல்லிகை பூ நேற்று ரூ.2000-க்கு விற்கப்பட்டது. இதேபோல, மற்ற பூக்களின் விலையும் சற்று உயர்ந்தன. முல்லை மற்றும் ஜாதிப்பூ கிலோ ரூ.1200-க்கும், ஆயுத பூஜைக்கு அதிகம் விற்பனையாகும் செண்டுமல்லி ரூ.200-க்கும் விற்பனையாகின. அரளி ரூ.600, சம்பங்கி ரூ.400, பட்டன் ரோஸ் ரூ.200, கோழிக்கொண்டை ரூ.150, மரிக்கொழுந்து, துளசி ரூ.60-க்கு விற்கப்பட்டன.
இதேபோல் எலுமிச்சை, பூசணிக்காய், பொரி, அவல், சுண்டல், பூஜை பொருட்கள், பழ வகைகள் விற்பனையும் அதிக அளவில் இருந்தது. கரும்பு ஒரு ஜோடி ரூ.160 முதல் 180-க்கும், வாழை கன்று ஒரு ஜோடி ரூ.50-க்கும் விலை போனது. நேற்று மாலை முதல் வாகனங்களை பழுது நீக்கும், கடைகளையும், வீடுகளையும் சுத்தம் செய்து பூஜைக்கு தயார் நிலையில் வைத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT