

அரூர்: வாச்சாத்தி வன்கொடுமை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடு, நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும் என சட்ட விழிப்புணர்வு முகாமில் நீதிபதியிடம் மலைவாழ் மக்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகேயுள்ள வாச்சாத்தி கிராமத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த வன்கொடுமை சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் சட்ட விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது.
தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணையக்குழு மற்றும் தருமபுரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணையக்குழு இணைந்து நடத்திய முகாமில் மாவட்ட முதன்மை நீதிபதி மணி மொழி வரவேற்றார். மாநில சட்டப்பணிகள் ஆணையக்குழு உறுப்பினர் செயலாளர் நசீர் அகமது, மாவட்ட ஆட்சியர் சாந்தி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
தமிழ்நாடு சட்டசேவைகள் மையத்தின் செயல் தலைவரும், மூத்த நீதிபதியுமான எஸ்.வைத்தியலிங்கம் தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார். அப்போது அவர் பேசியதாவது:
சட்ட உதவி மையத்தின் முதல் குறிக்கோள் வசதியற்றப் பிரிவினருக்கு நேர்மையான, அர்த்தமுள்ள நீதியை வழங்குவதே ஆகும். அதன் மூலம் நீதி நிலைநிறுத்தப்பட வேண்டும். இலவச சட்ட உதவித் தேவைப்படும் ஒருவர் சட்டப்பணிகள் ஆணையத்தின் குழுவை எழுத்து மூலம் தொடர்பு கொண்டால் உதவி செய்யப்படும். மேலும், சட்ட உதவிகள் மட்டுமின்றிஅரசின் மற்ற உதவிகள் தங்கு தடையின்றி கிடைக்கவும் ஏற்பாடு செய்து தரப்படும்.
ஒவ்வொரு மாவட்டத்திலும், தாலூகா அளவிலும் இலவச சட்ட மையம் செயல்படுகிறது. அங்கு சென்று பிரச்சினைகளை கூறினால் அதற்கான தீர்வு கிடைக்கும், என்றார். முகாமில், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க முன்னாள் தலைவர் பி.சண்முகம், தலைவர் டில்லிபாபு சார்பில் 130 மனுக்கள் வழங்கப்பட்டன.
மனுவில், கடந்த 1992-ம் ஆண்டு நடந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட18 பெண்களுக்கும், இதர பழங்குடி மக்களுக்கும் வீடு, நிலம் வழங்க வேண்டும். சம்பவத்தின் போது உடைக்கப்பட்ட ஓட்டு வீடுகளில் இன்றும் குடியிருந்து வரும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் அரசு தரமான வீடுகள் கட்டி தர வேண்டும், என கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
இதேபோல் பே.தாதம்பட்டி ஊராட்சி சார்பில் ஊராட்சித் தலைவர் பாரதிராஜா அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: வாச்சாத்தி வன்கொடுமை சம்பவத்தின் போது 180-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டனர். எனவே, பாதிக்கப்பட்டவர்கள் குறித்து மீண்டும் கணக்கெடுப்பு நடத்தி அவர்களுக்கும் நிதி உதவி மற்றும் நல திட்டங்கள் வழங்க வேண்டும். இப்பகுதி மக்கள் ஆடு, மாடுகளை மேய்ப்பதற்கு வனத்துறையினர் தடை விதிப்பதை தளர்த்த வேண்டும்.
வனப்பகுதியில் உள்ள பெருமாள் கோயிலுக்கு சென்று வர பாதை அமைத்து தர வேண்டும். இப்பகுதி மக்களுக்கு 100 சதவீதம் மானியத்தில் அரசின் உதவி திட்டங்கள் முழுமையாக வழங்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
முகாமில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம், கோட்டாட்சியர் வில்சன் ராசசேகர் மற்றும் நீதிபதிகள், வழக்கறிஞர்கள், வருவாய் மற்றும் உள்ளாட்சித் துறை அதிகாரிகள், பொதுமக்கள் பங்கேற்றனர். இறுதியில் தருமபுரி நிரந்தர மக்கள் நீதிமன்றத் தலைவர் ராஜா நன்றி கூறினார்.