

சென்னை: அரக்கோணம், மீனம்பாக்கம், மதுராந்தகம் உட்பட 7 ரயில் நிலையங்களில் மீண்டும் வாகன நிறுத்தும் வசதியை ஏற்படுத்தும் விதமாக, ஒப்பந்ததாரர்கள் தேர்வுசெய்யும் பணி நடைபெற்று வருகிறது.
தெற்கு ரயில்வேயில் தமிழகம், கேரளா ஆகிய இரு மாநிலங்களில் மட்டும் 600-க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் உள்ளன. இவற்றில், சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், திருச்சிராப்பள்ளி, மதுரை உட்பட 200-க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களில் வாகனங்களை நிறுத்தும் வசதிகள் இருக்கின்றன. கடந்த 2020-ம்ஆண்டு மார்ச் மாதத்துக்கு (கரோனா பாதிப்பு) முன்பு வரையில், வாகன நிறுத்தத்துக்கான ஒப்பந்ததாரர்களை தேர்வு செய்வதில் பெரிய அளவில் தாமதம் ஏற்படவில்லை.
ஆனால் கரோனா பாதிப்பின்போது ஏராளமான வாகன நிறுத்தங்களில் ஒப்பந்ததாரர்களின் ஒப்பந்த காலம் முடிந்து விட்டது. அதன்பிறகு, தெற்கு ரயில்வே எடுத்த நடவடிக்கையால் படிப்படியாக வாகன நிறுத்தும் இடங்களுக்கான ஒப்பந்ததாரர்கள் மீண்டும் தேர்வு செய்யப்படுகின்றனர்.
இந்நிலையில், அரக்கோணம், மதுராந்தகம் உட்பட 7 ரயில் நிலையங்களில் மீண்டும் வாகன நிறுத்தும் வசதி ஏற்படுத்தும் விதமாக, ஒப்பந்ததாரர்கள் தேர்வு செய்யும் பணி நடைபெறுகிறது. இது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
அதிக பயணிகள் வந்து செல்லும் ரயில் நிலையங்களில் படிப்படியாக வாகன நிறுத்த வசதி கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதுபோல ஏற்கெனவே வாகன நிறுத்த வசதி இருந்தும் பயன்படுத்தப்படாமல் இருக்கும் ரயில் நிலையங்களையும் தேர்வு செய்து புதிய ஒப்பந்ததாரர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
அதன்படி அரக்கோணம், திண்டிவனம், மதுராந்தகம், கலங்கரை விளக்கம், முண்டகக்கண்ணி அம்மன் கோயில், மீனம்பாக்கம், கிரீன்வேஸ் சாலை ரயில் நிலையங்களில் வாகன நிறுத்தவசதியை மீண்டும் கொண்டுவர ஒப்பந்தாரர்கள் தேர்வு செய்யும்பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையங்களில் ஒப்பந்தாரர்களை நியமனம் செய்து, வாகன நிறுத்த வசதியை விரைவில் கொண்டுவரப்படும்.