Published : 23 Oct 2023 06:15 AM
Last Updated : 23 Oct 2023 06:15 AM
சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியின் 72-வது பிறந்தநாள் விழா சென்னை சத்யமூர்த்திபவனில் நேற்று நடைபெற்றது. இதில் கட்சி நிர்வாகிகள் பட்டாசு வெடித்து, கேக் வெட்டி, நிலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடினர்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியின் 72-வது பிறந்தநாள் விழா, கட்சியின் மாநில வழக்கறிஞர் அணி தலைவர் சந்திரமோகன் ஏற்பாட்டில் சத்யமூர்த்தி பவனில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற கட்சியின் பல்வேறு நிலை நிர்வாகிகள் சத்யமூர்த்தி பவன் வளாகத்தில் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். விழாவில் வைக்கப்பட்டிருந்த 72 கிலோ கேக்கை, கட்சியின் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் வெட்டினார்.
விழாவையொட்டி ஏழை, எளிய மக்களுக்கு அசைவ விருந்தும் வழங்கப்பட்டது. கட்சியின் மாநில செயல் தலைவர் ஜெயக்குமார் உணவிட்டு விருந்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து ஏழை, எளியோர் 300 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. நலிந்த காங்கிரஸ் மூத்த தொண்டர்களுக்கு நிதியுதவியும் வழங்கப்பட்டது.
முதல்வர் வாழ்த்து: இன்நிலையில் கே.எஸ்.அழகிரி பிறந்தநாளையொட்டி, முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், ‘தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகள். மதச்சார்பின்மை, மனிதநேயத்தை மையப்படுத்திய தம் அரசியல் பயணத்தில் அவர் நல்ல உடல் நலத்துடன் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்' என குறிப்பிட்டிருந்தார்.
மாநில எஸ்சி அணி சார்பில், அதன் தலைவர் எம்.பி.ரஞ்சன் குமார் தலைமையில் புதுப்பேட்டை பகுதியில் ஏழை, எளிய மக்களுக்கு மின்சாதன பொருட்கள், ஆடைகள் உள்ளிட்ட நலதிட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இவ்விழாவில் கட்சியின் மாநில துணைத் தலைவர்கள் பொன்.கிருஷ்ண மூர்த்தி, உ.பலராமன், பொதுச்செயலாளர்கள் சிரஞ்சீவி, தளபதி பாஸ்கர், மாவட்ட தலைவர் எம்.எஸ்.திரவியம், மாநில மகளிரணி தலைவி சுதா ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT