Published : 23 Oct 2023 06:30 AM
Last Updated : 23 Oct 2023 06:30 AM

மதுரை மாநகராட்சி திருமண மண்டபத்தில் இயங்கும் கரிமேடு காவல்நிலையம் ரூ.58 லட்சம் வாடகை பாக்கி

மதுரை: மதுரை மாநகராட்சிக்குச் சொந்தமான திருமண மண்டபத்தில் செயல்படும் கரிமேடு காவல் நிலையம் ரூ.58 லட்சம் வாடகைபாக்கி வைத்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. 1980-ல் எம்ஜிஆர் ஆட்சியில் உலகத் தமிழ் மாநாடு நடந்தபோது, மதுரை மாநகராட்சிக்கு வருவாய் கிடைக்கும் வகையில், மேலப்பொன்னகரம், கரிமேடு, மதிச்சியம் உட்பட 12 இடங்களில் 15 திருமண மண்டபங்கள் கட்டப்பட்டன. இந்த மண்டபங்களில் வீட்டு விழாக்களை நடத்திக்கொள்ள பொதுமக்களுக்கு குறைந்த வாடகைக்கு விடப்பட்டன.

நாளடைவில் நகரில் தனியார் மண்டபங்கள் பெருகியதால் இந்த மண்டபங்களில் பொதுமக்கள் விழாக்கள் நடத்துவது குறைந்து விட்டது. இதனால் இந்த மண்டபங்கள் வெவ்வேறு பயன்பாட்டுக்கு மாற்றப்பட்டன. அதில், கரிமேட்டில் உள்ள மண்டபத்தில் காவல் நிலையம் செயல்படுகிறது. இதற்கு மாத வாடகை தருவதாக ஒப்புக்கொண்டுதான் மாநகர் காவல்துறை காவல் நிலையத்தை மண்டபத்துக்கு மாற்றியது.

ஆனால், வாடகை செலுத்தாததால் ரூ.58 லட்சம் வரை பாக்கி உள்ளது. குறைவான வாடகைக்குத்தான் மண்டபம் விடப்பட்டுள்ளது. ஆனால், அதைக்கூடச் செலுத்தவில்லை.

திருமண மண்டபத்தை மாநகர் காவல்துறையிடம் இருந்து மீட்க வேண்டும் என கடந்த மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் குரல் எழுப்பினர். இதுதவிர பல்வேறு பேருந்து நிலையம், மார்க்கெட் போன்ற இடங்களில் மாநகராட்சி கடைகளை குறைந்த வாடகைக்கு எடுத்தவர்கள் தற்போது உள் வாடகைக்கு வேறு நபர்களுக்கு மாற்றி விட்டு கூடுதல் லாபம் அடைகின்றனர்.

ஆனால், கடைகளுக்கான வாடகையை அவர்கள் முறையாகச் செலுத்துவதில்லை. கடைகளை ஒதுக்கீடு பெற்றவர்கள் பெரும்பாலும் திமுக, அதிமுகவைச் சேர்ந்தவர்கள்தான். கட்சிகளைச் சாராதவர்களாக இருக்கும்பட்சத்தில் அவர்கள் அரசியல் பின்னணியுடன் இருக்கின்றனர். அதனால், அவர்களின் கடைகளைப் பூட்டி சீல் வைக்க மாநகராட்சி அதிகாரிகளும் தயங்குகின்றனர்.

பொதுமக்கள் வீடு, கட்டிடங்களுக்கு வரி செலுத்த தாமதமானால் உடனே பாதாள சாக்கடை, குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு என நடவடிக்கையில் இறங்கும் அதிகாரிகள், ஏனோ அரசியல்வாதிகள், தொழில் அதிபர்கள், விஐபிக்கள் என்றால் நடவடிக்கை எடுக்கத் தயங்குகின்றனர்.

மேயர் இந்திராணி, ஒவ்வொரு மண்டலத்தில் அதிகமான வரி பாக்கி வைத்துள்ள முதல் 10 பேர் பட்டியலை எடுத்து அவர்களிடம் வரி வசூலிக்க நடவடிக்கை எடுத்தார். ஆனால், அந்த நடவடிக்கையை முழுமையாக மேற்கொள்ளாததால் மாநகராட்சியில் ரூ.400 கோடிக்கு மேல் வரி பாக்கி நிலுவையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து மாநகராட்சி திமுக உறுப்பினர்கள் குழு தலைவரும், கவுன்சிலருமான ஜெயராமன் கூறியதாவது: வரிபாக்கி வைத்திருப்போர் பட்டியலை கடந்த காலத்தில் அதிகாரிகள் பொது இடங்களில் பிளக்ஸ் பேனர் வைத்து வெளிப்படையான நடவடிக்கை எடுப்பார்கள்.

ஆனால், தற்போது அரசியல்வாதிகள், செல்வாக்குமிக்கோர் மட்டுமில்லாது கரிமேடு காவல் நிலையம் போல ஏராளமான அரசுத் துறை நிறுவனங்களும் வரி பாக்கி பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இதனால் மாநகராட்சி வெளிப்படையான நடவடிக்கை எடுப்பதில்லை. அதுபோல், கட்டிட அனுமதி வழங்குவதிலும் ஏராளமான முறைகேடுகள் நடக்கின்றன. அதை மாநகராட்சி ஆணையர் கண்டறிந்து வெளிப்படையான நிர்வாகம் நடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x