Published : 02 Jan 2018 10:05 AM
Last Updated : 02 Jan 2018 10:05 AM

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் கிருஷ்ணபிரியா இன்று ஆஜராகிறார்: சிகிச்சை வீடியோ குறித்து விளக்கம் அளிக்கிறார்

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியா இன்று நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கிறார்.

பெங்களூர் சிறையில் இருக்கும் சசிகலா, அப்போலோ மருத்துவமனை தலைவர் பிரதாப் சி.ரெட்டி, அவரது மகள் பிரீத்தா ரெட்டி, ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அப்போலோ மருத்துவமனை டாக்டர்கள், டிடிவி தினகரன், இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியா, ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் ஆகியோருக்கும் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

ஆர்.கே.நகர் தேர்தலுக்கு முதல்நாள், மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது எடுக்கப்பட்ட வீடியோவை டிடிவி தினகரனின் ஆதரவாளர் வெற்றிவேல் வெளியிட்டார். அதைத் தொடர்ந்து கிருஷ்ணபிரியா அளித்த பேட்டியில், இதேபோல நிறைய வீடியோக்கள் தங்களிடம் இருப்பதாக தெரிவித்தார்.

இதையடுத்து, ஜெயலலிதாவின் வீடியோ விவகாரம் குறித்து விளக்கம் அளிக்கும்படி கிருஷ்ணபிரியாவுக்கு விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியிருந்தது. அதன்படி, இன்று (2-ம் தேதி) விசாரணை ஆணையத்தில் கிருஷ்ணபிரியா நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கிறார். அப்போது தன்னிடம் உள்ள ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான வீடியோக்களையும் ஆணையத்தில் ஒப்படைக்க உள்ளார்.

கடந்த 2016-ம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரை ஜெயலலிதாவின் வீட்டில் வேலை பார்த்தவர்களின் விவரம், தொலைபேசி எண் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் தெரிவிக்குமாறு ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றனுக்கு அனுப்பப்பட்டுள்ள சம்மனில் கூறப்பட்டுள்ளது.

டாக்டர்களுக்கு சம்மன்

மேலும் சென்னை மருத்துவக் கல்லூரி துணைத் தலைவர் டாக்டர் சுதா சேஷய்யன் 3-ம் தேதியும், அப்போலோ மருத்துவமனை டாக்டர் சத்யபாமா 4-ம் தேதியும் நேரில் ஆஜராக விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலின்போது ஜெயலலிதாவிடம் கையெழுத்து வாங்கிய டாக்டர் பாலாஜி ஏற்கெனவே விசாரணை ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்திருந்தார். இந்நிலையில், வரும் 5-ம் தேதி தனது விளக்கத்தை எழுத்துப் பூர்வமாக தாக்கல் செய்ய உள்ளார்.

வழக்கறிஞர் மூலம் தாக்கல்

பெங்களூர் சிறையில் உள்ள சசிகலா, தன்னிடம் உள்ள ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான மருத்துவ ஆவணங்களை 15 நாட்களுக்குள் தாக்கல் செய்யும்படி, விசாரணை ஆணையம் கடந்த 22-ம் தேதி சம்மன் அனுப்பியது. தபால் மூலம் அனுப்பப்பட்ட இந்த சம்மனை சிறைத்துறை போலீஸ் சூப்பிரண்டு முன்னிலையில் சசிகலா கையெழுத்து போட்டு பெற்றுக்கொண்டார். இதைத்தொடர்ந்து தனது வழக்கறிஞர் மூலம் தன்னிடம் உள்ள மருத்துவ ஆவணங்களை விசாரணை ஆணையத்தில் தாக்கல் செய்ய உள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x