காசநோயாளிகளுக்கு 2 மாதங்களாக மாத்திரைகள் வழங்கப்படவில்லை- மற்றவர்களுக்கும் நோய் பரவும் அபாயம்

காசநோயாளிகளுக்கு 2 மாதங்களாக மாத்திரைகள் வழங்கப்படவில்லை- மற்றவர்களுக்கும் நோய் பரவும் அபாயம்
Updated on
2 min read

தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட காசநோய் மையங்களில் மாத்திரைகள் இருப்பில் இல்லாத தால், முற்றிய நிலை காசநோயாளி களுக்கு 2 மாதங்களாக மாத்திரை கள் வழங்கப்படவில்லை. இதனால் அவர்களிடம் இருந்து மற்றவர் களுக்கும் காசநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் காசநோயால் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். காசநோய் ஆரம்ப நிலையில் உள்ளவர்கள் 6 முதல் 8 மாதங்கள் வரை சிகிச்சை எடுத்தால் குணமடையலாம். முற்றிய நிலையில் உள்ள எம்.டி.ஆர் (மல்டி டிராக் ரெசிஸ்டன்ட்) என்ற காசநோய்க்கு இரண்டு ஆண்டுகள் சிகிச்சை பெற வேண்டும். அப்படி சிகிச்சை எடுக்காவிட்டால் அது எக்ஸ்.டி.ஆர். (எக்ஸ்டென்சிவ்லி டிராக் ரெசிஸ்டன்ட்) காசநோயாக மாறி நோயாளி உயிரிழக்கும் நிலைக்கு சென்றுவிடுகிறது. தமிழகத்தில் 20 பேருக்கு எக்ஸ்.டி.ஆர். காசநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

2 ஆயிரம் பேர் பாதிப்பு

தமிழகம் முழுவதும் முற்றிய நிலையான எம்.டி.ஆர் காச நோயால் சுமார் 2 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்தந்த மாவட்ட காசநோய் மையங்களில் இருந்து இவர்களுக்கு மாதத்திற்கு ஒருமுறை மாத்திரைகள் விநியோகிக்கப்படுகின்றன. கடந்த 2 மாதங்களாக மாவட்ட காசநோய் மையங்களில் மாத்திரைகள் இருப்பு இல்லாததால் நோயாளி களுக்கு மாத்திரை கொடுக்கப்பட வில்லை. இதனால் எம்.டி.ஆர். காசநோயாளிகள் தொடர் சிகிச்சையை மேற்கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

மாத்திரை இல்லை

இதுதொடர்பாக காசநோய் தடுப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் கூறியதாவது:

எம்.டி.ஆர் என்பது முற்றிய நிலை காசநோயாகும். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு மாத்திரைகளை சாப்பிட வேண்டும். தினமும் (ஞாயிற்றுக்கிழமை தவிர) ஊசி போட்டுக் கொள்ள வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட காசநோய் மையங்களிலும் மாத்திரைகள் மற்றும் ஊசிக்கான மருந்து இருப்பில் இல்லை. அதனால் கடந்த 2 மாதங்களாக, எம்.டி.ஆர் காசநோயாளிகளுக்கு மாத்திரைகள் மற்றும் ஊசி விநியோகிக்கப்படவில்லை. சென்னையில் உள்ள மருந்து வழங்கும் தலைமையிடத்தை தொடர்புகொண்டு மருந்து அனுப்பும்படி கேட்டோம். அதற்கு அவர்கள், மருந்துகளை பேக் செய்து அனுப்புவதற்கு ஆட்கள் இல்லை. நீங்களே வந்து மருந்துகளை பேக் செய்து, கொரியர் மூலமாக போட்டு எடுத்துச் செல்லுங்கள் என சொல்கின்றனர்.

மற்றவர்களுக்கு பரவும் அபாயம்

எம்.டி.ஆர் காசநோயாளிகள் சிகிச்சையை தொடர முடியாத நிலை ஏற்பட்டால், அது அவர்களின் உயிருக்கே ஆபத்தாக மாறிவிடும். காசநோய் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு காற்று மூலமாக எளிதாக பரவும். எம்.டி.ஆர் காசநோயாளிகள் முறையாக சிகிச்சை பெற முடியாவிட்டால், அவர்களின் தும்மல் மற்றும் இருமல் மூலமாக விரைவாக குடும்பத்தில் உள்ள குழந்தைகள் உட்பட அனைவருக்கும் பரவும். அதுவும் சாதாரண காசநோயாக இல்லாமல், முற்றிய நிலை எம்.டி.ஆர் காசநோயாக பரவக்கூடும். அதனால் பொதுமக்களின் நலன் கருதி எம்.டி.ஆர் காசநோயாளி களுக்கு தேவையான மாத்திரைகள் மற்றும் ஊசிக்கான மருந்தை முறையாக விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

தட்டுப்பாடு இல்லை

இதுதொடர்பாக தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் (பொறுப்பு) கூறியதாவது:

எம்.டி.ஆர் காசநோயாளி களுக்கு மருந்து தட்டுப்பாடு கண்டிப்பாக இருக்க வாய்ப் பில்லை. அப்படி இருந்தால், உடனடியாக காசநோயாளிகளுக்கு மருந்துகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in