

திருப்பூர்: பெருமாநல்லூர் அருகே கீழே கிடந்த ரூ.50 ஆயிரத்தை உரியவரிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநருக்கு காவல் துறையினர், பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
திருப்பூரை சேர்ந்தவர் தயாநிதி (22). இவரது தாத்தா காளியண்ணன் இறந்து விட்ட நிலையில், துக்க காரியத்துக்காக தாயார் கலைவாணியை அழைத்துக் கொண்டு திருப்பூரில் இருந்து கோபி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். பெருமா நல்லூர் வழியாக செல்லும் போது, கை பையில் வைத்திருந்த ரூ.50 ஆயிரத்தை தவறவிட்டார்.
இதைத் தொடர்ந்து, அந்த வழியாக பின்னால் வந்து கொண்டிருந்த ஆட்டோ ஓட்டுநர் அபி மன்னன் (48), கீழே விழுந்து கிடந்த ரூ.50 ஆயிரத்தை பெருமா நல்லூர் போலீஸாரிடம் ஒப்படைத்தார். இந்நிலையில், பணம் தவற விட்டது தொடர்பாக தகவல் அளித்திருந்த தயாநிதியை பெருமா நல்லூர் போலீஸார் தொடர்பு கொண்டனர்.
பின்னர், காவல் ஆய்வாளர் வசந்த குமார், ஆட்டோ ஒட்டுநர் அபி மன்னன் ஆகியோர் ரூ.50 ஆயிரத்தை தயாநிதியிடம் ஒப்படைத்தனர். இதற்காக ஆட்டோ ஓட்டுநர் அபி மன்னனை பொது மக்கள், காவல் துறையினர் பாராட்டினர்.