

சென்னை: சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தின் போது பக்தர்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க மாநகராட்சி, காவல்துறை மற்றும் அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் சேலத்தைச் சேர்ந்த ஏ.ராதா கிருஷ்ணன் தாக்கல் செய்திருந்த மனுவில், சேலத்தில் சேர மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட பழமையான கோட்டை மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழா பிரசித்தி பெற்றது. இந்த கோயில் கும்பாபிஷேகம் வரும் அக்.27-ம் தேதி நடைபெறவுள்ளது.
சுற்றுச் சுவர் பழுது: கோயிலின் தென்மேற்கு பகுதியில் உள்ள சுற்றுச்சுவர் எந்நேரமும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் பக்தர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த சுற்றுச்சுவரை ஒட்டி பல்வேறு கடைகளும் கட்டப்பட்டுள்ளன. எனவே அந்த சுற்றுச்சுவரை சரி செய்ய அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும், என அதில் கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.டி.ஆதிகேசவலு, இந்த கோயில் சுற்றுச்சுவரை ஒட்டியுள்ள மாநகராட்சி இடத்தில் ஏராளமான கடைகள் முறைகேடாக கட்டப்பட்டுள்ளன என்றும், இதனால் பக்தர்களுக்கு ஆபத்து ஏற்படும் எனவும் மனுதாரர் தெரிவித்துள்ளதால் சேலம் மாநகர காவல்துறை துணை ஆணையர்,
அறநிலையத் துறை ஆணையர், இணை ஆணையர், கோட்டை மாரியம்மன் கோயில் செயல் அலுவலர் ஆகியோர் மாநகராட்சி ஆணையருடன் ஆலோசனை நடத்தி பக்தர்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அது தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும், என உத்தரவிட்டு வழக்கை வரும் நவ.7-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.