Published : 22 Oct 2023 08:33 AM
Last Updated : 22 Oct 2023 08:33 AM
சென்னை: சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் ரூ.308.75 கோடியில் கட்டப்படும் கூடுதல் கண்காட்சி மற்றும் மாநாட்டு அரங்க கட்டிட கட்டுமானப் பணிகளையும் விரைந்து முடிக்க தலைமைச் செயலர் சிவ் தாஸ் மீனா உத்தரவிட்டார்.
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் ரூ.308.75 கோடியில் 9 லட்சம் சதுர பரப்பளவில் 4 ஆயிரம் பேர் அமரக்கூடிய மாநாட்டு அரங்கம் மற்றும் 5 பொருட்காட்சி அரங்கங்கள், 1,300 வாகனங்கள் நிறுத்தும் வசதி கொண்ட பன்னடுக்கு வாகன நிறுத்தம் ஆகியவற்றின் கட்டுமானப் பணிகளைப் தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா நேற்று ஆய்வு செய்தார். பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து நெடுஞ்சாலைத் துறை சார்பில் கிண்டி தொழிற்பேட்டை சிட்கோ சாலையில் ரூ.3.47 கோடியில் 360 மீட்டருக்கும், ஈக்காட்டுத்தாங்கலில் ரூ.5.50 கோடியில் 556 மீட்டருக்கும், அரும்பாக்கம் பகுதியில் ரூ.5.80 கோடியில் 660 மீட்டருக்கும், அண்ணா சாலை டி.எம்.எஸ். சந்திப்பில் ரூ.2.77 கோடியில் 315மீட்டர் நீளத்துக்கும் மேற்கொள்ளப்பட்டுவரும் மழைநீர் வடிகால் பணிகளை பார்வையிட்ட தலைமை செயலர் விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
பின்னர், சிங்கார சென்னை 2.0 திட்ட நிதி ரூ.1.40 கோடியில் காந்தி இர்வின் சாலை சந்திப்பு – சென் ஆன்ரூஸ் சர்ச்சில் மழைநீர் வடிகால் தொட்டியை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
நீர்வளத்துறை சார்பில் விருகம்பாக்கம் கால்வாயில் மேற்கொள்ளப்பட்டுள்ள தூர்வாரும் பணியையும், திரு.வி.க.நகர் மண்டலம், அம்பேத்கர் சாலையில் ஓட்டேரி நல்லா கால்வாயில் மேற்கொள்ளப்பட்டுள்ள தூர்வாரும் பணியையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ ராதாகிருஷ்ணன், நெடுஞ்சாலைத் துறை செயலர் பிரதீப் யாதவ், தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் சந்தீப் நந்தூரி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT