Published : 22 Oct 2023 04:08 AM
Last Updated : 22 Oct 2023 04:08 AM
மதுரை: மதுரையில் தெரு விளக்கு எரியாததால், சாலை தடுப்பில் கார் மோதி பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க, மதுரை மாநகராட்சிக்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை கலைநகர் முதல் தெருவைச் சோந்த ஷைனி மேஷாக் என்பவர், மதுரை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு: நான் எனது மகளுடன் கடந்த 7.1.2022 அன்று இரவு 8 மணியளவில் காரில் சென்றேன். மதுரை பீ.பீ.குளம் உழவர் சந்தையின் அருகில் சென்றபோது, தெரு விளக்குகள் எரியாததால் இருட்டாக இருந்தது. இதனால் சாலையின் நடுவில் இருந்த தடுப்பில் என் கார் மோதியது.
இந்த விபத்தில் எங்கள் கார் சேதமடைந்தது. அது மட்டுமின்றி, எனக்கும் காயங்கள் ஏற்பட்டன. இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன். இதனால் கடும் மன உளைச்சலுக்கு நான் ஆளானதற்கு, மதுரை மாநகராட்சி நிர்வாகம் தான் காரணம். எனவே, இதற்காக உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி பாரி, உறுப்பினர் வேலுமணி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில், சாலையில் விளக்குகள் எரியாததால், தடுப்பில் கார் மோதி மனுதாரர் பாதிக்கப்பட்டு உள்ளார். இது, மதுரை மாநகராட்சி நிர்வாகத்தின் சேவை குறைபாடு ஆகும். எனவே, மனுதாரருக்கு ரூ.1 லட்சம் இழப்பீடாக, மதுரை மாநகராட்சி சார்பில் வழங்கப்பட வேண்டும் என உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT