

பத்திரிகையாளரும் எழுத்தாளரும் அரசியல் விமர்சகருமான ஞாநியின் மறைவுக்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். ஞாநியின் மறைவு தமிழ்ப் பத்திரிகை உலகிற்கு பேரிழப்பு என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், "பத்திரிகையாளர் ஞாநியின் மறைவு மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்துகிறது. தனித்துவமான அரசியல் மற்றும் சமூகப் பார்வையுடன் கட்டுரைகள் பலபற்றைப் படைத்திருக்கும் ஞாநி, பத்திரிகை, நாடகம், தொலைக்காட்சி, இணையதளம் உள்பட ஊடகத்துறையின் பல்வேறு தளங்களில் கவனம் செலுத்தியவர். மேலும், கருணாநிதியிடமும், முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனிடமும் மிகுந்த நட்பு பாராட்டி வந்த ஞாநி, முரசொலி நாளேட்டில் ‘புதையல்’ எனும் சிறப்புப் பகுதியை, சக பத்திரிகையாளர்களான சின்னகுத்தூசி, க.திருநாவுக்கரசு ஆகியோருடன் இணைந்து வழங்கியவர்.
தனிப்பட்ட முறையில் என் மீதும் அன்பு செலுத்தி, ஒரு பத்திரிகையாளராக தனது கருத்துகளை வெளிப்படையாக பரிமாறிக் கொண்டவர். அரசியல் களத்தில் மாறுபட்ட கருத்துகள் இருப்பினும், எப்போதும் சுயசார்புடன் இயங்கி வந்த ஞாநியின் மறைவு, தமிழ்ப் பத்திரிகையுலகிற்கு ஏற்பட்டுள்ள பேரிழப்பாகும்.
அவரது மறைவால் வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்"
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.