

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் அக்.23 முதல் அக்.31 வரை 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
மருது சகோதரர்கள் நினைவு தினம் அக்.24-ம் தேதி சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரிலும், அக்.27-ம் தேதி காளையார் கோவிலிலும் நடைபெறுகிறது. அதேபோல் ராமநாதபுரம் மாவட்டம் பசும் பொன்னில் அக்.30-ம் தேதி முத்துராமலிங்கத் தேவர் பிறந்த நாள் மற்றும் நினைவு நாள் விழா நடைபெறுகிறது.
இதையொட்டி சிவகங்கை மாவட்டத்தில் அக்.23-ம் தேதி முதல் அக்.31-ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் உத்தரவிட்டார். மேலும் மருது சகோதரர்கள் நினைவு தின நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருப்பத்தூரில் மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் பார்வையிட்டார்.
அதேபோல் காளையார் கோவில், திருப்பத்தூரில் பாதுகாப்பு ஏற்பாடுகளை தென் மண்டல ஐஜி நரேந்திரன் நாயர், ராமநாதபுரம் சரக டிஐஜி துரை, எஸ்பி அரவிந்த் ஆகியோர் பார்வையிட்டனர்.